முள் காட்டிலும் பூக்கள் உண்டு- அத்தியாயம் இரண்டு (இமாம் மஹ்தி தொடர் 01)

 உஸ்தாத் மன்சூரும் நானும்!

நேற்று நண்பரொருவர் அழைப்பெடுத்தார். என்னுடைய பதிவொன்றை விமர்சித்தார். (பதிவை பின்னூட்டலில் இணைக்கிறேன்)அந்தப் பதிவில், அல் குர்ஆணின் வசனங்களை சவாலுக்கு உட்படுத்திய ஞானசார தேரரின் கேள்வி ஒன்றையும், அதற்கு அல் குர்ஆணின் அடிப்படையிலும், அஸ் ஸுன்னாவின் ஒளியிலும் பதில் தந்த ஜம்மியத்துல் உலமாவின் கருத்தையும் பதிந்திருந்தேன்.
அழைப்பெடுத்த நண்பர் "உங்களுடைய கேள்விகளுக்கு உஸ்தாத் மன்சூர் பகிரங்கமாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த ஒரு அவையில் பதில் சொல்லி விட்டார். உங்களுக்கு அது தெரியாதா?" என்று கேட்டார்.
"எப்பொழுது?" என்றேன்.
"கொஞ்சம் பொறுங்கள்" என்றார் . சில வினாடிகளில் 2019 செப்டம்பர்" என்றார்.
"ஞானசார தேரர் இந்தக் கேள்விகளை 2012 லேயே கேட்கத் துவங்கி இருந்தாரே.......... அதற்குப் பதில் சொல்ல இத்தனை வருடங்கள் தேவைப்பட்டதா?" என்ற நான் "அதாவது.....இஸ்லாம் என்று நம்பி வழித்தவறிய ஸஹ்ரானின் கூட்டத்தினரின் தற்கொடை அழிவுக்குப் பின்னர்.......அவசர அவசரமாக இப்படி பதில் சொல்லி இருக்கிறார். இல்லையா?" என்றேன்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் "ஆமாம்......" என்றார்.
அவர் தேரரின் கேள்விக்கு விடையாக எழுதிய நூலின் பெயரைக் கேட்டேன்.சொன்னார். எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒரு வட்சப் இணைய இலக்கத்தைத் தந்தார். அலைப்பெடுத்தேன். பதிலில்லை. சில மணி நேரங்களில் அந்த இணைப்பிலிருந்து சில செய்திகள் வந்தன. அதில் இணைவதன் மூலம் தேவையான நூற்களைப் பெற முடியுமென்று சேதி சொன்னன. சில நூல்களை ஆர்டர் செய்தேன். அதன் பின்னர் வேறு சில நூற்களின் விபரங்கள் வந்தன. வாசித்தேன். ஒரு நூல் என்னை வசீகரித்தது.
நூலின் பெயர் : மதத்தைத் துறத்தலும் மத நிந்தனையும் -ஒருபார்வை-
இணையத்தில் நூலில் இருக்கும் செய்திகளின் சாராம்சம் இப்படி இருந்தது:
'அல்குர்ஆன், நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தைத் தழுவி விட்டு மார்க்கத்தை மாற்றிக் கொள்வதற்கான உலக தண்டனை எதனையும் குறிப்பிடவில்லை; மறுமையின் தண்டனையைத்தான் சொல்லியிருக்கிறது. இவ்வாறு அல் குர்ஆன் 'மது மாற்றத்திற்கான தண்டனைகள் எதனையும் குறிப்பிடாமை (கருத்தும் சுதந்திரத்தை வலியுறுத்திய அதன் சிந்தனைப் போக்கின் விளைவாகும்.
சுன்னாவைப் பொறுத்தவரையில் மார்க்கத்திற்கு எதிராகப் போராடல் என்ற நோக்கமின்றி சாதாரணமாக நிகழும் கருத்து மாற்றம் என்ற வகையில் ஒருவர் மார்க்கத்தை விட்டு வெளியேறினால் அது தண்டனைக்குரிய குற்றமன்று என்பதனையே இறைத்தூதர் (ஸல்) அவர்களது நடைமுறை எமக்குக் காட்டுகிறது..........
இனி மற்ற பகுதியை வாசிக்கும் முன்னர் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த நினைக்கிறேன்.
அஸ் ஸுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் மக்களுக்கு 'ரித்தா'வுக்கான தண்டனை மரணதண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இது தவறானது எனபது என்னுடைய வாதம். இரண்டாயிரத்து பதின் ஒன்றிலேயே இந்தக் கருத்தை முன்வைத்தேன். இஸ்லாத்துக்கு முரணானது என்று தமிழ் இஸ்லாமிய அறிஞர்களால் கருதப்பட்ட என்னுடைய வாதத்துக்கு அல் குர்ஆணும் அதற்கு முரண்படாத ஹதீஸ்களும் அடிப்படையாக இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
2012 அல்லது 2013 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். மத மாற்றம் சப்பந்தமான என்னுடைய இந்த ஆய்வில் ஜாமியா நலீமியாவின் விரிவுரையாளர் ஒருவரிடம் சில கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பொன்று கிடைத்தது.
அக்குரணை மன்சூர் மௌலவி ஜாமியா நலீமியாவின் மூத்த விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் நிறைய இஸ்லாமிய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி இருக்கிறார். இப்பொழுது ஜாமியாவில் விரிவுரையாளர்களாக இருக்கும் பலர் அவரது மாணவர்களில் ஒருவராக இருப்பார். நம்பலாம்.
என்னுடைய அந்த நினைவுத் தடயத்தை வலைத்தளத்தில் இப்படி பதிவேற்றி இருந்தேன்.
'இரவு சுமார் 9.30 மணியிருக்கும்.
நான் என்னுடைய சிறிய தொழிற்சாலையில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்.வீடு பக்கத்தில் இருப்பதால் கிடைக்கும் அனுகூலங்களில் இதுவும் ஒன்று.
செல்பேசி அழைத்தது.
மறுமுனையில் ஒரு ஜம்மியா இளைஞன்.
ஜம்மியா இளைஞர்கள் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக சில டீ சேர்ட்கள் வேண்டும் என்று வந்தார்கள். அவர்களை என்னுடைய நளீமி நண்பரொருவர் அனுப்பி இருந்தார். குறிப்பிட்ட அந்த வியாபாரத்தில் நான் அவர்களுடன் நெருக்கமான தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
வந்தார்கள்........
அவர்களை என்னுடன் கூடவே இருந்து என்னுடைய வியாபாரத்துக்கு உதவும் என் மனைவியிடம் அவர்களை அறிமுகம் செய்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு கூறி விட்டு அதனை நான் மறந்து விட்டேன். ஆனால், அவர்கள் என்னுடைய நிறுவனத்துக்கு சுமார் முப்பத்து மூவாயிரம் தர வேண்டி இருப்பதாகவும், சுமார் எட்டாயிரம் ரூபா பெறுமதியான அவர்களின் டீ சேர்ட்கள் எம்மிடம் இருப்பதாகவும் நிறுவனக் கணக்கு காட்டியது.
முப்பத்து மூவாயிரம் ரூபா கொடுத்து எட்டாயிரம் ரூபா பெறுமதியான டீ சேர்ட்களை விரல் விட்டு எண்ணக் கூடிய சில நேர்மையான வியாபாரிகளைத் தவிர இலங்கையில் வேறு யாரும் எடுக்க வரப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.ஆகவே, இந்த வியாபார ஒப்பந்தத்தை நட்டமான ஒன்று என்று கைவிட்டு விட்டேன். ஆனால், இன்று என்னுடன் தொடர்புக் கொண்ட அந்த இளைஞன் அவர் எனக்கு முப்பத்து ஐந்தாயிரம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் அதனை தருவதற்கு வந்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
காத்திருந்தேன்.
வந்தார். கூடவே இன்னும் ஒரு இளைஞன்.
கணக்குவழக்குகள் முடிந்தன.
ஜம்மியா இளைஞர்களின் நேர்மை எண்ணக் கவர்ந்தது.நான் அவர்களை, அவர்களின் நேர்மையை மனதாரப் பாராட்டினேன்.துடிப்பான அந்த இளைஞர்களின் நேர்மை என்னை வசீகரித்தக் காரணத்தினால் அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.
எதுவும் இருக்கவில்லை.
மேசையில் ‘அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர்கள் நரகவாதிகளா?’ என்ற என்னுடைய ஆய்வுப் புத்தகம் இருந்தது.
நான் ஒட்டகை கொள்ளைக்காரர்களின் ஹதீஸ்களை புஹாரி கிரந்தங்களை வைத்துக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது.என்னுடைய மேசையில் பரவலாக அறபு தப்ஸீர்களும் தமிழ் மொழிபெயர்ப்பு ஹதீஸ் கிரந்தங்களும் சிதறி காணப்பட்டன.
நான் என்னுடைய புத்தகத்தை அவர்களுக்குக் கொடுத்தேன்.என்னுடைய புத்தகத்தை கண்டவுடன் விடைபெற இருந்தவர்கள் அமர்ந்து என்னுடன் உரையாடத் துவங்கினார்கள்.
அவர்கள் என்னைப் பற்றி சில விடயங்களை தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்ட, நான் சின்னதாக ஒரு அறிமுகம் செய்துக் கொண்டேன்.
ஜம்மியா இளைஞனுடன் கூடவே வந்திருந்த அடுத்த இளைஞர் நளீமியாவின் இளம் பட்டதாரி என அறிந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். அறபு மொழியில் புலமை கொண்டிருந்த அவரது உதவியுடன் சில ஹதீஸ்களின் சரியான தமிழ் மொழி பெயர்ப்பை இன்னும் ஊர்ஜிதம் செய்துக் கொள்ள முயன்றேன். ஒட்டகை கொள்ளையர்களின் தண்டனை சம்பந்தமான என்னுடைய ஒரு பதிவின் ஹதீஸ் விளக்கத்தை சிறந்த முறையில் விளக்கியவர்களில் அந்த நளீமி பட்டதாரியும் ஒருவராக மாறி நின்றார்.
நான் அந்த நளீமி பட்டதாரியிடம் இன்னும் சில விளக்கங்களை கேட்டேன்.
ஒட்டகை கொள்ளையர்களின் தண்டனைக்கு காரணமான பிரதான குற்றங்களில் இஸ்லாத்தை ஏற்ற அவர்கள் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியதும் ஒன்றாகும். அதனால், என் முன்னால் இருந்த இளம் நளீமியிடம் இஸ்லாத்தை விட்டும் இன்னுமொரு மதத்தை தேர்ந்தெடுத்து இஸ்லாத்தை விட்டும் விலகினால் அவ்வாறு விலகிய மனிதரின் நிலைமை என்ன என்று கேட்டேன்.
“அவர் கொல்லப்படவேண்டும்” என்று எவ்வித தயக்கமுமின்றி அந்த நளீமியாவின் இளம் பட்டதாரி சொன்னார். சொன்னவர் அத்துடன் நிற்காமல் "கொஞ்சம் பொறுங்கள்....எங்களது உஸ்தாத் ஒருவரிடமும் கேட்டுப் பார்ப்போம்" என்ற அவர் தனது செல்போனில் யாரையோ அழைத்தார்.
அழைப்பில் பதில் கிடைக்க “செய்க் ஷிஹான் ..... ஒருவருக்கு இஸ்லாமிய சட்டவியல் விடயங்களில் சில தெளிவுகள் தேவைப் படுகின்றன......இதோ அவருடன் பேசுங்கள்” என்று கூறியவாறு என்னிடம் போனைத் தந்தார்.
நான் ஷேய்க் ஷிஹானுக்கு ஸலாம் சொன்னேன். பதில் சொன்னார்.” நீங்கள் யார் பேசுகிறது?” என்று கேட்டார்.
“நான் ஒரு வியாபாரி.......சில விடயங்களில் எனக்குத் தெளிவு தேவை...உங்களால் உதவ முடியுமா?” என்றேன்.
“என்ன விடயம்” என்றார்.
“ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை விட்டும் இன்னொரு மதத்தை தெரிவு செய்து மதம் மாறினால் அவருக்கு என்ன தண்டனை” என்று நான் கேட்டேன்.
“நாம் சிறுபான்மையாக வாழுகின்ற நாட்டில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நாம் பெரும்பான்மையாக வாழ்கின்ற இஸ்லாமிய நாட்டில் யாராவது மதம் மாறினால் அவருக்கு மூன்று தினங்கள் கால அவகாசம் வழங்கப்படும். அந்த மூன்று நாள்களுக்குள் அவர் திரும்பவும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் சரி. இல்லையென்றால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.” என்றார்.
நான் அவருடன் வேறொன்றும் பேசவில்லை.”உங்களது பதிலுக்கு நன்றி” என்று கூறி போனை துண்டித்தேன்.
என் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்களை ஏறிட்ட நான் அவர் என்னிடம் கூறிய செய்திகளை விளக்கினேன். "நாங்களும் அதனைத்தான் படித்திருக்கிறோம்." என்ற அவர்கள் என்னிடம் "உங்களது கருத்து என்ன சேர்?" என்றார்கள்.
"அவர் சொல்வது முற்றிலும் தவறு” என்றேன்.
“அதெப்படி?” என்றார்கள்.
“மனிதனின் தெரிவு சுதந்திரத்தை அல்லாஹ் கௌரவிக்கிறான். அவர்கள் விரும்பியதை தெரிவு செய்து விரும்பியவாறு வாழ்வதை இறைவன் ஒரு போதும் தடுப்பதில்லை. ஆனால், அந்த சுதந்திரத்தை உபயோகித்து ஏனையவர்களுக்கு இடையூறாக வாழ்வதை இறைவன் விரும்புவதில்லை. மதத்தைப் பொறுத்தவரை வழிகேடும் நேர்வழியும் நம் முன்னால் நமது தெரிவில் தங்கி இருக்கின்றன. மனிதன் தான் விரும்பிய மார்க்கத்தை தெரிவு செய்து வாழலாம். மரணத்தின் பின்னர் அதற்கான கூலி உண்டு.”. என்றேன்.
மெளனமாக இருந்தார்கள். பின்னர் என்னிடம் 'உங்களது கூற்றுக்கு எதாவது ஆதாரங்கள் இருக்கிறதா?" என்று கேட்டார்கள்.
"ஆம்....அல் குர்ஆணின் போதனைகள் ஆதாரமாக இருக்கின்றன" என்ற நான் அவர்களிடம் இப்படி எடுத்து சொன்னேன். “(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். [2:256]........
"மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? [10:99].......
"(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) "என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?" என்று கூறினார். [11:28]........
"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." [109:6]..... என்றொலிக்கும் சில அல் குர்ஆனின் புனித ஆயத்துக்களுடன் நீங்கள் சொல்லும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் முரண்படுகிறதே?” என்றேன்.
"உங்களுடைய இந்தத் தர்க்கத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைகளை அல் குர்ஆண் மட்டும் தீர்மானிக்கவில்லை.அஸ் ஸுன்னாவின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படும். சில தண்டனைகளை இஸ்லாமிய அறிஞர்கள் இஜ்மா, ஃகியாஸ் மூலம் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அல் குர்ஆணை சரியாக விளங்கிக் கொள்ள அஸ் ஸுன்னாவின் ஒளி அவசியம். அல் குர்ஆணை மாத்திரம் கருத்திற்கொண்டு எதனையும் தீர்ப்பளிக்க முடியாது சேர்." என்ற அவர்கள் விடைபெற்று சென்று விட்டார்கள்.
நானும் அதனைப் பொருட்படுத்தவில்லை.
சரி......... அப்படியானால், அஸ்ஸுன்னாவின் ஒளியில் 2012 அல்லது 2013 வரை மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று நலீமியாவின் விரிவுரையாளர்கள் இரகசியமாக போதித்துக் கொண்டிருந்தார்கள். மாணவர்களும் அதனை ஸுன்னா என்று நம்பி மோசம் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென், 2019 ஏப்ரல் குண்டு வெடிப்புக்குப் பின்னர் தங்களது தன்னிருப்பு கேள்விக்குறியாகி விட்டதன் பின்னர்தான் ஜாமியா நலீமியாவின் விரிவுரையாளர்களுக்கு அல் குர்ஆணின் போதனை சரியாக விளங்கத் துவங்கி விட்டது.? சிங்கம் நரிக்கு கொடுத்த அடியைக் கண்டதும், கழுதைக்கு வந்த ஞானோதயம் போல?
இப்பொழுது ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மதம் மாறியவர்களைக் கொலை செய்வதுதான் அல் குர்ஆணினதும் அஸ் ஸுன்னாவினதும் தீர்ப்பு என்ற கொள்கையில் இருந்து முழுதாக விலகி விட்டதா?
அறிந்துக் கொள்ளவும், தெரிந்துக் கொள்ளவும் மிக ஆவலுடன் இருக்கிறேன்.
சரி..........இனி மத நிந்தனை சம்பந்தமாக அக்குரணை மன்சூர் மௌலவி என்னதான் சொல்கிறார்? அதனையும் கேட்டுப் பார்ப்போம்? அவர் மத நிந்தனை சம்பந்தமாக இப்படி எழுதி இருக்கிறார்.
"மனித சமூகத்தில் காணப்படும். பன்மைத்துவத்தை ஏற்று மனித சகோதரத்துவத்தை இஸ்லாம் மிகவும் வலியுறுந்துகிறது. இதற்கு எதிரான நிலையும் அதேவேளை மனித சகோதரத்தை உடைத்துவிடும் போக்கும் கொண்டதுமே மத நிந்தளையாகும் சமூகங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் மத்தியிலான மோதல்களை உருவாந்தி மனித சமூகத்தையே துண்டாடி விடும். நிலையையே மத தி்ந்தனை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
"இஸ்லாத்தின் அடிப்படைச் சிந்தனைகளின் பின்னணியில் மத நிந்தனை என்பது பல வகையில் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக அமைகிறது. அது வார்த்தைகள் மூலமான வன்முறையாகும். எனவே அதனை ஒரு குற்ற செயலாகக் காண்பதே ஏற்புடையதாகும். ஒரு செயலைச் குற்றமாகக் கானும் போது அதற்குத் தண்டனை வழங்கப்படுவதையும் இன்லாம் அனுமதிக்கிறது. அந்தண்டனை, இக்குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்த வரையில் வரையறுக்கப்பட்ட தண்டனையன்று. அது குற்றம் செய்த நபர், குழல், குற்றத்தின் பாரதூரம் என்பவற்றைப் பொறுத்து நீதிமன்றம் தீர்மானிக்கும் தண்டனையாகும். இது முஸ்லிம், முஸ்லிமல் பொறபடுகள் அனைவருக்கும் பொதுவானதாகவே அமையும். இதுவே இஸ்லாத்தின் பரிபாஷையில் 'தஃவீர்' என்ற வரையறுக்கப்படா தண்டனையாகும்.
'தஃவீர்' என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது. எனினும், மத நிந்தனை அல்லது அல்லாஹ்வையும் அவனது ரஸூலுல்லாஹ்வையும் நிந்தனை செய்வதற்கு அல் குர்ஆணில் என்ன தண்டனை கட்டளையிடப்பட்டிருக்கிறது?
அறிந்துக் கொள்ள புனித அல் குர்ஆணைப் புரட்டினேன்.
அல் குர்ஆண் ஆச்சரியமானது. நளினமானது. தன்னை இகழ்ந்துப் பேசும் எதிரியையும் இகழ்ந்துப் பேசத் துணியாதது. ரஸூலுல்லாஹ்வின் காலத்தில் அக்கால அறபுகள் ரஸூலுல்லாஹ்வை 'பைத்தியக்காரன்' என்று பரிகசித்தார்கள். நிந்தனை செய்தார்கள்.கேலியாக இகழ்ந்துப் பேசினார்கள். அவர்களுக்கு மிக கண்ணியமான முறையில் அல் குர்ஆண் பதில் சொன்னது. கேட்டுப் பாருங்கள். ஆச்சரியப் படுவீர்கள்.
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
68:5. எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
68:6. உங்களில் எவர்சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
ரஸூலுல்லாஹ் வைப் பார்த்து பைத்தியக்காரர் என்று சொன்னவர்களைக் கூட அல் குர்ஆண் பைத்தியக்காரர் என்று அழைக்கவில்லை. கவனித்தீர்களா? ஆனால், அதிகமான தப்ஸீர் விரிவுரையாளர்கள் 68:6 என்ற வசனத்துக்கு உங்களில் எவர் பைத்தியமென்னும் நோயால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை. என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.
அல் குர் ஆண் மிகத் தெளிவாக இப்படி சொல்லியிருக்க அஸ் ஸுன்னாவின் பெயரால் ரஸூலுல்லாஹ்வை, அல்லாஹ்வை, இஸ்லாத்தை, அல் குர்ஆணை நிந்தனை செய்வதைக் கண்டதும் கொதித்து எழும் மக்கள் வெறும் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு, போலியாக தம்மை அல்லாஹ்வை, அவனது ரஸூலுல்லாஹ்வை நேசிப்பவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இல்லையா?
அல்லாஹ்வை, அவனது ரஸூலுல்லாஹ்வை தீனுல் இஸ்லாத்தை நிந்தனை செய்பவர்களைக் கண்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அல் குர்ஆண் மிக அழகாக நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
பி.கு.
அல் குர்ஆணின் 5:33 வது ஆயத்துக்கும் அக்குரணை மன்சூர் மௌலவி தவறாகவே அர்த்தம் சொலியிருக்கிறார். இஸ்லாத்தின் பெயரால் அரசாலும் அத்தனை நாடுகளும் தமது தன்னிருப்பை பேணிக்கொள்ள அல்லது காத்துக்கொள்ள 'ஹிராபா' என்ற பெயரில் மக்களை நசுக்கி கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய அநியாயக் கார இஸ்லாமிய நாடுகளின் அநியாயக்கார அரசுகளைக் காக்க மானியங்களுக்கு விலைபோன இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தைத்தான் அவரும் சொல்லியிருக்கிறார்.
'ஹிராபா' என்ற இஸ்லாமிய சட்டத்துறை அஸ் ஸுன்னாவின் ஒளியில் அல் குர்ஆணின் போதனையை திரித்து சட்டமியற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அவரது விளக்கத்தில் அந்த ஆயத்துக்கு விளக்கமாக சொல்லப்படுகின்ற அஸ் ஸுன்னாவின் ஒளியில் பொத்திக் காக்கப்படும் ஹதீஸ்களை அவர் தொட்டுக்காட்ட விரும்பவில்லை. நாசூக்காக நழுவியிருக்கிறார். ஏனெனில், அந்த ஹதீஸ்களை அறிந்துக் கொண்டதும், அதனை அடிப்படையாக வைத்து எழும் கேள்விகளுக்கான விடையை அவர் தெரிந்திருக்க வில்லை.
அல்லாஹ்வின் அருளால், அந்த ஹதீஸ் புனையப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

Comments