முள் காட்டில் பூக்களும் உண்டு! அத்தியாயம் மூன்று - (இமாம் மஹ்தி தொடர் 01)
நுழையும் முன்.........
கேட்டவுடன் அதிர்ந்துப் போனேன். எனக்கு அல் குர்ஆணின் பல ஆயத்துக்களுக்கு விளக்கம் சொல்லிக் கொடுத்த பல இஸ்லாமிய அறிஞர்களில் இந்த அஸாத் மௌலானாவும் ஒருவர். இவர் மிக முக்கியமானவர். கொழும்பு வரும் நேரமெல்லாம் வீடு தேடி வருவார். ஒன்றாக வெளியில் செல்வோம். கூடவே நம்முடன் சில ஏழைகளையும் அழைத்துக் கொள்வார். உயர்ரக ஹோட்டல்களில், கே.எப்.சி., மெக்டோனால்ட்ஸ் உணவகங்களில் உற்சாகமாக உணவுண்ணுவோம். பணத்தை அவரே கொடுப்பார்.
"பயாஸ்........ஏழை வாப்பாமர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர்கள் அவர்களுடைய குடும்பத்துக்காக நிறையவே தியாகங்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள். தூக்கத்தை தொலைத்து உழைக்கிறார்கள். நல்ல ஆடைகளை வாங்காமல் பிள்ளைகளுக்காக அதனை ஒதுக்கி வைக்கிறார்கள். நல்ல உணவகங்களில் உணவுண்ணும் ஆசை இருந்தும் அதனை குடும்பத்துக்காக தியாகம் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு வீட்டுக்கு உணவுகளை வாங்கி செல்கிறார்கள். நான் அழைத்து வரும் அத்தனைபேரும் இத்தகைய தியாகிகள்."
கேட்ட நான் பேச்சிழந்து நின்றேன்.
எங்களது உரையாடல் முழுதும் மார்க்கம் சம்பந்தமானதாக இருக்கும். வசனத்துக்கு வசனம் சிரிப்பு கோடிடும். வாழ்கின்ற வாழ்க்கையில் உற்சாகமாக சிரிப்புடன், அடுத்தவரை கலாய்த்துக்கொண்டு வாழ்ந்து வந்த அவர் இன்று மரணித்து விட்டாராம்.
உடனே நான் வெலிகமை நோக்கி பயணமானேன்.
களுத்துறையை அண்மிக்கும் பொழுது மீண்டும் அலைபேசியில் அதே நண்பர்.
"எங்கிருக்கிறீர்கள் பயாஸ்...?"
"களுத்துறையில்"
"திரும்பி விடுங்கள். நீங்கள் அங்கு போவதில் பிரயோசனம் இல்லையென்று நினைக்கிறேன்."
வாகனத்தை ஓரம் கட்டினேன். "என்ன சொல்கிறீர்கள்?"
"ஜனாஸாவை அடக்கியாச்சாம். போவதில் அர்த்தமில்லை.திரும்பி விடுங்கள். ஜனாஸாவுக்கு பத்து பதினைந்து பேர்களே வந்தார்களாம்." சொன்னவர் குரலில் சோகம் ஜரிகையிட இப்படி தொடர்ந்தார். "மௌலானாவின் ஜனாஸாவை அடக்க ஒரு கப்ரைத் தயார் செய்தார்களாம். வெட்டி முடிய கப்ரில் நீர் நிறைந்ததாம்."
"என்ன சொல்கிறீர்கள்?"
"முதலாவது கப்ரில் ஜனாஸாவை அடக்க முடியாத அளவு நீர் நிறைந்ததாம். உடனே பிறிதொரு கப்ரை தயார் செய்தார்களாம். வெட்டி முடிய அந்தக் கப்ர் இடிந்து விழுந்து ஜனாஸாவை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு மண் நிறைந்ததாம். அப்புறம் மூன்றாவது கப்ரைத் தயார் செய்து அங்குதான் ஜனாஸாவை அடக்கினார்களாம்."
அதிர்ச்சியாக இருந்தது. வித்தியாசமானதொரு நிகழ்வு. என்னவாக இருக்கும்?
கவலையுடன் திரும்பினேன். வரும் வழியில் அஸாத் மௌலானாவை முதலில் சந்தித்த அந்த அனுபவம் மனத்தில் விரிந்தது.
இனி பதிவினுள் நுழைவோம்- இன்ஷா அல்லாஹ்.
௦௦ ௦௦ ௦௦ ௦௦ ௦௦ ௦௦
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹுத்தஆலா நாம் அறியாத செய்திகளில் நமக்கு அவசியமான விளக்கத்தை தந்தருள் புரிவானாக!
"ஒரு விடயத்தை விசுவாசிக்க வேண்டுமானால் அதற்கு தர்க்கரீதியான ஆதாரங்கள் அவசியம். அறிவுள்ளவர்கள் ஆதாரங்களின்றி எதனையும் விசுவாசிக்கப் போவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் ஆதாரங்கள் என்று கேட்பதற்கும், விசுவாசிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படும் செய்திகளுக்கும் இடையில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.
"ரஸூலுல்லாஹ்வின் மறைவின் பின்னர் வாய்மொழியாக அவரது விளக்கங்கள் என்று சில செய்திகள் காவி வரப்பட்டன. அவை இரு நூறு வருடங்களின் பின்னர் ஆவணப்படுத்தப்பட்டன. அந்தக் கிரந்தங்கள் சொல்லும் செய்திகளைத்தான் நாம் இஸ்லாத்தின் ஆதாரமாகக் கொள்கிறோம். கேட்கிறோம். விசுவாசிக்கிறோம். ஆனால், அல்லாஹ்வின் வேத நூல் இன்றுவரை எவ்வித மாற்றங்களுமின்றி பாதுகாக்கப் பட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேத நூலில் இருக்கும் செய்திகளை சரி காண நாம் அல் குர்ஆண் அருளப்பட்டதன் பின்னர் இருநூறு வருடங்கள் கழிந்து மனிதர்களினால் எழுதப்பட்ட கிரந்தங்களின் ஆதாரத்தை கேட்டுத் திரிகிறோம். சுமந்து திரிகிறோம். அவற்றை அல் குர்ஆணுக்கான ஆதாரமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.
"சில நேரங்களில் அல் குர்ஆணின் போதனைகளுக்கும் அத்தகைய ஹதீஸ் ஆதாரங்களுக்கும் இடையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளைக் காண்கிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் நாம் அறிஞர்களின் கிரந்தத்தை சரி கண்டு ஏற்றுக் கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அல் குர்ஆணை புறந்தள்ளி விடுகிறோம்.
"ஒவ்வொரு மனிதனும் காரணகாரியமின்றி செயற்படுவதில்லை. தான் செய்கின்ற காரியத்தால் தனக்கு ஏதும் தீங்கு நிகழும் என்றிருந்தால் மனிதர்கள் அதனை செய்ய மாட்டார்கள். இல்லையா?. எனினும், மிகக் கவனம் எடுக்க வேண்டிய மார்க்க விசயத்தில் அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அதுவும் அல் குர்ஆணின் போதனையை செயற்படுத்தும் பொழுது அதனைக் கருத்தில் கொள்வதேயில்லை. அல் குர்ஆணின் விடயத்தில் மாத்திரம் சிறந்த அறிஞர்கள் என்று மக்கள் யாரையெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்களின் கூற்றுக்கு அல்லது கருத்துக்கு செவி கொடுக்கிறார்கள். பின்னர் அதனை அப்படியே காவி, சுமந்துக் கொண்டு திரிகிறார்கள். அதுதான் சரியான விளக்கம் என்று தீர்ப்பளிக்கவும் துவங்கி விடுகிறார்கள். இது ஒரு வகையான அடிமைத்தனம். வேறொரு வார்த்தையில் சொன்னால் வணக்கம். அல் குர்ஆண் இதனை தக்லீத் என்கிறது. அல் குர்ஆண் தக்லீதை ஆதரிப்பதில்லை.
"அல் குர்ஆணின் போதனையை வாழ்க்கையில் எடுத்து நடக்க தீர்மானிக்கும் ஒருவர் அதுபற்றிய தீர்க்கமான அறிவை தேடி முயற்சித்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும், அல் குர்ஆணை மிக சிறப்பாக ஓதத் தெரிந்த அதனை மனணமிட்ட முஸ்லிம்களிடையே அல்லாஹ்வின் அருள்மறை சம்பந்தமாக மிகத் தவறான கருத்தொன்று தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அல் குர்ஆணின் போதனையை ஒருவரினால் இலகுவாக புரிந்துக் கொள்ள முடியாது என்றும், அதனை சரியாக விளங்கிக் கொள்ள அறபு மொழியில் தேர்ச்சி பெற்ற கற்றிந்த அறிஞர்களின் துணை அவசியம் என்றும் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் என்று அறியப்படுகின்றவர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக அந்தக் கருத்தை மக்கள்மயப்படுத்தியும் வந்திருக்கிறார்கள். இன்றும் அதனையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அதனால், அல் குர் ஆணுடன் மக்களுக்கு உருவாக வேண்டிய நல்லுறவை தூரமாக்கி வைத்திருக்கிறார்கள்.
"இதனால், மக்கள் அல் குர்ஆணைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதனை தெரிந்துக் கொள்ள சிரமப்படுவதுமில்லை. தங்களது அறிஞர்கள் என்று அறியப்படுகின்ற பிரபலங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பிரகாரமே செயற்படுகிறார்கள். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்றறிந்த ஆலிம்களும் அவர்களது ஆசிரியர்களினதும், ஆசிரியர்களின் இமாம்கள் சொன்ன கருத்தையும் விசுவாசிக்கிறார்கள். அதனையே சாமான்ய மக்களுக்கு இஸ்லாம் என்று கற்றுக் கொடுக்கிறார்கள்."
இப்படி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தவர் அஸாத் மௌலானா. ஹம்பாந்தொட்டையை சேர்ந்த இவர் இப்பொழுது வெலிகமையில் இருக்கிறார்.
அல் குர்ஆணின் 5:33ஆயத்துக்கு விளக்கம் அறிந்துக் கொள்ள நான் பிரபல்யமான பல அறிஞர்களை சந்திக்க முயன்ற நேரம் அது. உங்களிடம் அதனை சொல்லியும் இருக்கிறேன். சாத்தியப்படாத அத்தகைய முயற்சிகளைக் கேள்விப்பட்ட நண்பரொருவர் அந்த ஆயத்துக்கான சரியான விளக்கத்தை அறிந்த ஒருவரை தான் அறிந்திருப்பதாக சொன்னார். அவரது பரிந்துரையில் இன்று இதோ அஸாத் மௌலானாவிடம் கேள்விக்கு திருப்திகரமான விடை தெரியாத 5:33ஆயத்துக்கு விளக்கம் கேட்டு மௌலானாவின் வீட்டில் முன் ஹாலில் அமர்ந்திருகிறேன்.
அஸாத் மௌலானாவைக் கண்ட முதல் பார்வையில் நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். நான் மனத்தில் நினைத்திருந்த மௌலானாவை எனக்கெதிரில் காணவில்லை. நீண்ட ஜுப்பாஹ் அணிந்து, அடர்ந்த தாடி தலையில் தலைப்பாகையுடன் ஒருவரை நான் தேடி வந்திருந்தேன். ஆனால், எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் இவரோ கிளீன் சேவில் பளீரென்று ஒரு சினிமா ஹீரோ போலத் தெரிந்தார். கருமையான தலைமயிர் நீளமாக வளர்ந்திருந்தது. அலட்சியமாக தோள்வரை புரண்டுக் கொண்டிருந்தது. அடர்ந்த தலைமயிரை மறைத்த தலையிலிருந்த தொப்பி மிடுக்கைக் கொடுத்தது. கைகளில் தஸ்பீஹ் கோர்வை இருந்தது. உதடுகள் எதனையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. திடகாத்திரமான இந்த மனுஷன் வெள்ளை நிற ஆடையில் ஆறடிக்கும் உயர்வாக கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கவைத்தார். சுருக்கமாக தோற்றத்தில் கிரிக்கட் வீரர், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானை நினைவில் கொணர்ந்தார்.
அஸாத் மௌலானா இருபது வருட சேவைக் காலம் முடிய இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் கப்பல் மாலுமியாக உலகை சுற்றி சுற்றி வந்தவர். போகும் ஊர்களில் இருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்களைக் கண்டு அவர்களிடம் இஸ்லாம் கற்றவர் என்று இந்த சந்திப்பில் தெரிந்துக் கொண்டேன்.
"அல் குர்ஆணை விளங்கிக் கொள்ள அறபு மொழியில் தேர்ச்சி பெற்ற துறை சார் அறிஞர்களின் துணை அவசியம் என்ற அந்தக் கருத்து சரிதானே மௌலானா?" நான் இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தேன்.
"அப்படியா?...... அது யாருடைய கருத்து?.....அல்லாஹ் அல் குர்ஆணில் அப்படியான கருத்தை சொல்லி இருக்கிறானா? அல்லது ரஸூலுல்லாஹ் அப்படி சொல்லி இருக்கிறாரா?....இல்லையே? அந்தக் கருத்து உண்மை என்றிருந்தால் வலீத் பின் முகைரா, அபூஜஹ்ல் ஆகியோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருப்பார்களே?"
நான் நிமிருந்து அமர்ந்தேன். "என்ன சொல்ல வருகிறீர்கள் மௌலானா ?"
அஸாத் மௌலானா தன்னிடமிருந்த அல் குர்ஆணை என்னிடம் தந்தார். "இதிலிருக்கும் அத்தியாயம் 55 ஆயத்துக்கள் 1-2 என்ன சொல்கிறதென்று பாருங்கள்."என்றார்.
பார்த்தேன். "அளவற்ற அருளாளன்தான்,இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான்."55:1-2
மௌலானா தொடர்ந்தார். அத்தியாயம் 9 6 : 1 இலிருந்து5 வரை வாசியுங்கள்.
வாசித்தேன்.
"(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. மனிதனை (அட்டைப்பூச்சி போன்று) ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான். மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.-(9 6 : 1-5)"
"இப்பொழுது சொல்லுங்கள்...அல் குர்ஆணின் கருத்தின் பிரகாரம் மனிதனுக்கு அவன் அறியாத அறிவுகளைக் கற்றுக் கொடுக்கும் கொடையாளி யார்?"
"அல்லாஹ்"
"அப்படியானால், அல் குர்ஆணிலிருக்கும் சரியான அறிவுரைகளை மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் யார்?
"அல்லாஹ்........"
"அல் குர்ஆணைத் தவிர ஏனைய அனைத்து உலக அறிவுகளையும் மக்கள் முயற்சித்துப் பெற்றுக் கொள்கிறார்கள். அதனால், அவரவருக்கு விருப்பமான துறையில் நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள். ஆனால், அல் குர்ஆணை அப்படிக் கற்றுக்கொள்ள முனைவதில்லை. அதற்கு தடைக்கற்களாக நான் சொன்ன இஸ்லாமிய அறிஞர்கள் இருக்கிறார்கள். இல்லையா?"
"அளவற்ற அருளாளன்தான்,இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான்."55:1-2 என்ற இந்த ஆயத்தில் அல்லாஹுத்தஆலா தன்னை அல் குர்ஆணைக் கற்றுத் தரும் ஆசான் என்கிறான். அந்த செயலை சொல்லும்பொழுது அவன் தன்னை ரஹ்மான்- அளவற்ற அருளாளன் - என்று அழைத்திருக்கிறான். ரஹ்மானான அல்லாஹ் மனிதர்களுக்குக் கற்றுத்தர தயாராக இருக்கின்ற அல் குர்ஆணை வஹியாக ரசூலுல்லாஹ்வுக்கு முதலில் அருளினான். அவர்கள் அதனை அறிவித்து, எழுதி, சரி பார்த்து பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனால்தான் ரசூலுல்லாஹ்வுக்கு ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சிறப்பும் கிடைத்திருக்கிறது. அதனை அல்லாஹுத்தஆலா அல் குர்ஆணில் இப்படி சொல்லியிருக்கிறான்.
21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை."
"........... .......... ............"
"என்றாலும், மக்களுக்கு விளங்காத விடயங்களை செய்யச் சொல்லி இஸ்லாம் ஒருபோதும் வலியுறுத்துவதில்லை. அதனை, அது மிக அழகாக இப்படி சொல்லியிருக்கிறது.
'எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைத் தொடரவேண்டாம்; நிச்சயமாக செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றிடமும் அதனதன் செயல் பற்றி மறுமையில்கேள்வி கேட்கப்படும்.'17:36.
"புனித அல் குர்ஆணை விளங்கிக் கொள்ள மத்ரஸாவில் அறபு மொழியை தூய உருது மொழியில் கற்ற இஸ்லாமிய அறிஞர்களின் துணை அவசியமா என்ற கேள்விக்கு அல்லாஹ் அல் குர்ஆணில் இப்படி பதில் சொல்கிறான். அல் குர்ஆணின் தப்ஸீர் உரையை அல் குர்ஆணிலேயே பொதிந்து வைத்திருப்பதாக அல்லாஹ் இந்த ஆயத்தில் கூறுகிறான். கொஞ்சம் பாருங்கள்.
'நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு அறிவின் அடிப்படையில் விபரமாக -தப்ஸீர்- விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
7:52.'
"நான் சொல்லப்போகும் இந்த ஆயத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். இதில், அல்லாஹுத்தஆலா அல் குர்ஆணின் அறிவுரையை ஏற்றுக்கொள்ள முன்வருபவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று மக்களிடமே கேட்கிறான். இதே விதமாக இன்னும் சில ஆயத்துக்களில் அடிக்கடி அல்லாஹுத்தஆலா இதனையே இவ்விதமாகவே கேட்டிருக்கிறான். உதாரணத்துக்கு ஒன்றை மாத்திரம் சொல்கின்றேன்.
'நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். எனினும், இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?54:17'
"அல்லாஹுத்தஆலா அல் குர்ஆணில் உபதேசத்தை நாடி அல் குர்ஆணின் பக்கம் வருபவர்களுக்கு மிக விபரமாக அல் குர்ஆணிலேயே அதன் விளக்கவுரையை அதாவது தப்ஸீரை வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறான்.
'மேலும் மிக அழகான -தப்ஸீர்- விளக்கத்தை இதில் நாம் விபரமாக விபரித்துக் கூறியுள்ளோம்.25:33.'
"நாம் விசுவாசிக்கும் நமது அறிஞர்களின் கருத்தின் பிரகாரம் அல் குர்ஆணை விளங்கிக் கொள்ள அல் குர்ஆணின் ஆயத்துக்களுக்கு விளக்கம் சொன்ன தப்ஸீர் அறிஞர்களின் விளக்கவுரைகள் மாத்திரம்தான் அவசியம் என்று நம்பவைக்கப் பட்டிருக்கிறோம். ஆனால், அல் குர்ஆணோ எப்படியான கேள்விகளுக்கும் மிக சிறந்த சரியான தப்ஸீர் விளக்கத்தை தன்னுள் கொண்டிருபதாக நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது.அதனை நாம் அவதானிக்க மறந்துப் போயிருக்கிறோம். இல்லையா?"
அஸாத் மொலானாவின் வாயிலிருந்து மடை திறந்த வெள்ளம்போல பீறிட்டுப் பாய்ந்துக் கொண்டிருந்த இந்த விளக்கங்கள் என்னை திக்குமுக்காட வைத்தன. அவர் சொன்னவை அத்தனையும் அல் குர்ஆணின் ஆயத்துக்களை ஆதாரமாகக் கொண்டு ஆச்சரியப் படவைத்தன. நல்லவேளையாக அவர் சொன்ன அல் குர்ஆணின் ஆதார ஆயத்துக்களை நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
அஸாத் மௌலானா தொடர்ந்தார். "புனித அல் குர்ஆணை விளங்கிக் கொள்ள மனிதர்களுக்குத் தேவை ஆர்வம். அல் குர்ஆண் என்ன சொல்கிறது என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவசியம். அதனைத்தான் அல் குர்ஆண் மனிதர்களையும், ஜின்களையும் அவரவர்கள் ஆர்வம் கொண்டிருக்கும் சுய தெரிவு சுதந்திரத்துடன் அல்லாஹ் படைத்திருப்பதாக சொல்லியிருக்கிறது. அதனை நமது இஸ்லாமிய அறிஞர் குலாம் அல்லாஹ்வை வணங்கவே மனிதர்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அந்தக் கூற்றினால், அல்லாஹ்வை கையாலாதவனாகவும் ,வணக்கம் என்ற தேவை உள்ளவனாகவும் அறிமுகப்படுத்தி மோசம் போயிருக்கிறார்கள்.
"புரியவில்லை மௌலானா?"
"அல்லாஹுத்தஆலா சர்வ வல்லமையுள்ளவன் என்று நம்புகிறீர்களா?"
"அதிலென்ன சந்தேகம்."
"அவன் எவ்வித தேவையும் அற்றவன் என்று நம்புகிறீர்கள்தானே?"
"ஆம்....உறுதியாக சொல்கிறேன். அவன் எவ்விதத் தேவையும் அற்றவன்."
"சரி...அப்படியானால், உலகில் வெறும் அற்பமான மனிதர்கள் அலட்சியத்துடன், பொடுபோக்குடன் ஏனோ தானோவென்று செய்கின்ற இந்த வணக்கம் அவனுக்குத் தேவையா?......சரி...உலக மக்கள் அனைவரும் அவனை இறைவனாக ஏற்றுக் கொண்டு அவனை வணங்குவதால் அல்லாஹ்வுக்கு ஏதாவது இலாபம் கிடைக்கிறதா? அவனது இராஜ்ஜியம் அந்த வணக்கத்தால் விரிவடைகிறதா?இல்லையே?.........சரி, இனி மனிதர்கள் அவனுடன் கோபம் கொண்டு அவனை நிராகரித்து அவனை வணங்க மறுத்துவிட்டால் அவனது இராஜ்ஜியத்தில் அணு அளவாவது குறைந்து விடுமா?"
தயக்கத்துடன் "நீங்கள் சொல்வது சரி மௌலானா" என்றேன்.
கேலியாக சிரித்தார். பின்னர் "அல்லாஹ் சர்வ வல்லமை உள்ளவன்தானே?" என்று கேட்டார்.
"ஆம் அவன் சர்வ வல்லமையுள்ளவன்" என்றேன்.
"மனிதர்கள் அத்தனைபேரும் அல்லாஹ்வை இறைவனாக ஏற்று அவனை வணங்குகிறார்களா?"
"இல்லை மௌலானா?"
"உலக மக்களை விட்டு விடுங்கள். அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கொண்டதாக சொல்லிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களா?"
மீண்டும் கொஞ்சம் தயக்கத்துடன் "இல்லை மௌலானா" என்றேன்.
"அல்லாஹ்வை வணங்குவதற்காகவே அன்றி மனிதர்களையும், ஜின்களையும் நான் படைக்கவில்லை....என்று அல்லாஹ் கூறியிருக்கும் செய்தி உண்மை என்றிருந்தால் சர்வ வல்லமைக் கொண்ட அவனால் மனிதர்களை, இல்லை அவனை இறைவனாக ஏற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மனிதர்களையாவது அவனை வணங்கச் செய்ய முடியவில்லையே? ஹ்ம்ம்ம். அந்தளவுக்குகூட அவனுக்கு ஆற்றல் இல்லையா?"
"அஸ்தக்பிருல்லாஹ்.......நான் கனவிலும் அப்படி சொல்ல மாட்டேன் மௌலானா?"
"இல்லையே......அனுதினமும் அப்படி உளறிக் கொண்டிருக்கிறோமே?...... சரி...இப்பொழுது நான் சொன்னவிதமாக அதனைக் கூறிப் பாருங்கள்...." என்ற அவர் இப்படி கொஞ்சம் அழுத்தமாக சொல்லத் துவங்கினார்..'" அல் குர்ஆண் மனிதர்களையும், ஜின்களையும் அவரவர்கள் ஆர்வம் கொண்டிருக்கும் சுய தெரிவு சுதந்திரத்துடன் அல்லாஹ் படைத்திருப்பதாக சொல்லிகொண்டிருக்கிறது. இத்தகைய சுதந்திர தெரிவு அனுமதிக்கப்பட்ட மனிதர்கள் அவரவர் விருப்பப்பிரகாரம் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவும் முடியும். அவனை நிராகரித்து வேறு இறைவனை தெரிவு செய்யவும் முடியும். விரும்பினால் அவனை வணங்கவும் முடியும். விருப்பம் இல்லையென்றால் அவனை உதாசீனம் செய்து வாழவும் முடியும். இத்தகைய தெரிவு சுதந்திரத்துடன்தான் மனிதர்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்திருக்கிறான்."
விக்கித்து நின்றேன்.
எத்துணை உண்மை. என்னுடைய தெரிவு சுதந்திரம் என்னை இங்கு கொண்டு வந்து இதோ மௌலானா முன் அல் குர்ஆணைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. அதே தெரிவு சுதந்திரம் அந்த உண்மைகளை இப்பொழுது டைப்பிக் கொண்டிருக்க வைத்திருக்கிறது. அதே தெரிவு சுதந்தரம் உங்களை இணையத்தில் சறுக்கி வந்து இந்த உண்மைகளை வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் அருளிய அதே தெரிவு சுதந்திரம் இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள அல்லது மறுதலிக்க உங்களுக்கு பூரணமான அனுமதியை கௌரவித்திருக்கிறது.
'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.51:56. '
இப்படித்தான் அல் குர்ஆண் கட்டளையிடுவதாக நமது அறிஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அனைவரும் அல்லாஹ்வை தொழ வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சிலர், தொழ மறுக்கும் மக்களின் வீட்டுக்கு தீ வைக்க வேண்டும் என்றும் இஸ்லாமியத் தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கேட்கும் நாமும் அப்படியே விசுவாசிக்கிறோம். ஆனால், இந்த ஆயத் மாத்திரம் உண்மையானதாக இருக்குமானால், அப்படிக் கட்டளையிட்ட அல்லாஹ்வினால் குறைந்த அளவில் முஸ்லிம்களையாவது அவனை வணங்க செய்யும் ஆற்றலில் அல்லாஹ் இல்லையே என்றொரு கேள்வி எழுவதை தடுக்க முடியாதிருக்கிறது. அல்லாஹ்வின் வல்லமையில் சந்தேகம் பிறக்க இந்தக் கேள்வி காரணமாகவும் அமைந்து விடுகிறது.
அப்படி என்றால் இந்தக் குர்ஆணிய ஆயத் பிழையாக இருக்கவேண்டும். அல்லது அல்லாஹுத்தஆலா மனிதர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாதவனாக இருக்க வேண்டும்.
எது சரி?
மௌலானா சொன்ன விதமாக 'அல்லாஹுத்தஆலா மனிதர்களையும் ஜின்களையும் அவரவர் விரும்பிய தெரிவு சுதந்திரத்துடன் வாழவே அன்றி படைக்கவில்லை.' என்று அந்த ஆயத்துக்கு அர்த்தம் வந்தால் மனிதர்கள் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை அவன்தான் மனிதர்களுக்கு நல்கினான் என்பதில் எவ்வித சந்தேகமும் எழாது. அது மட்டுமன்றி, 'விரும்பியவிதமாக வாழ்ந்துவிட்டுப் போ' என்ற அல்லாஹ்வின் தாராளத் தன்மை வேறொரு செய்தியையும் சொல்லி நிற்கிறது. அல்லாஹ் மனிதனுக்கு அலட்சியமாக வீசியெறிந்த தெரிவு சுதந்திர பிச்சையின் முன்னால் மனிதன் நிபந்தனையில்லா சரணாகதியாவதைத் தவிர வேறு வழியில்லை.
இல்லையா?
'வாவ்...' என்னை உற்சாகம் தொற்றிக் கொண்டது.
"பயாஸ்........ உலகத்திலே கலவரங்கள் வெடிக்க பிரதானமான காரணம் என்ன?"
"பல காரணங்கள் இருக்கின்றன."
"பல காரணங்களில் பிரதானமான காரணம்?"
எனக்கு விடை தெரியவில்லை. மெளனமாக இருந்தேன்.
"சுதந்திரம்." மௌலானா புன்னகையுடன் தொடர்ந்தார். "சுதந்திரத்தைக் கேட்டுத்தான் போராட்டங்கள் வெடிக்கின்றன.சுதந்திரத்துக்குத்தான் இரத்தங்கள் சிந்தப்படுகின்றன. சுதந்திரத்தின் மகிமையை அடிமைகளாக இருக்கும் மக்களால்தான் உணர முடியும். அந்த சுதந்திரத்தை மனிதர்கள் கேட்காமலேயே அல்லாஹ் வழங்கி கௌரவித்திருக்கிறான். படைத்த அல்லாஹ்வை தனது இறைவனாக ஏற்றுக்கொள்ளவோ மறுத்து நிராகரிக்கவோ கூடிய சுதந்திரம் மனிதனுக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டிருக்கிறது. மனிதனது இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது, அல்லது மறுத்துவிடுவது என்ற சுதந்திரத்தை மட்டுமல்ல, அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு செயல் சுதந்திரத்தையும் வழங்கி கௌரவித்திருக்கிறான். மரணிக்கும் வரை உனது விருப்பம் எதுவோ அப்படி அப்படி வாழ்ந்து மடி."
உண்மைதான்.
அஸாத் மௌலானா மீண்டும் முதலில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார். "புனித அல் குர்ஆணை விளங்கிக் கொள்ள மனிதர்களுக்குத் தேவை ஆர்வம் என்று சொன்னேன். அல் குர்ஆண் என்ன சொல்கிறது என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவசியம். கூடவே, அதற்கு இடையறா முயற்சியும் தேவை. அப்படி முயல்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால், அல் குர்ஆணின் போதனையை சரியாக புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களை அல்லாஹுத்தஆலா உருவாக்கிக் கொடுப்பான். இதோ, எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் உங்களைப்போல."
நான் மெலிதாக சிரித்து வைத்தேன்.
"சரி........இப்பொழுது சொல்லுங்கள். அல் குர்ஆணில் உங்களுக்கிருக்கும் பிரச்சினை என்ன?"
பிரச்சினையை இப்படி சொன்னேன். "அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.5:33. "
"மிகத் தெளிவான இந்த ஆயத்திலே உங்களுக்கு இருக்கும் குழப்பம்தான் என்ன?"
"இந்த ஆயத்துக்கு இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லியிருக்கும் விளக்கத்தில் குழப்பம் இருக்கிறது?"
"அப்படி என்னதான் குழப்பம்?"
இந்த அல் குர்ஆணிய ஆயத்துக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்னிடமும், நண்பர் ஹசனிடமும் சொன்ன விளக்கத்தை நான் அஸாத் மௌலானாவிடம் சொன்னேன். தேரர் ஞான சாராவின் கேள்வியையும் சொன்னேன். விபரம் அறிய ஆவலுள்ள நண்பர்கள் ''ஆலிம்'களின் செவலையில் கொம்பெடுத்து திமிரைத்தான் அடக்குதல்'......./ பதிவை வாசித்துக் கொள்ளுங்கள். அது, இந்தப்பதிவை இலகுவாக புரிந்துக் கொள்ளத் துணை நிற்கும். இன்ஷா அல்லாஹ்.
சொல்லி முடிந்ததன் பின்னர் மௌலான சிரித்தார். "இமாம் இப்னு கதீரின் கருத்தை சுமந்திருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் மாட்டிக் கொண்டு தடுமாறுகிறார்கள். பாவம் அவர்கள். அவர்கள் அல் குர்ஆணின் ஆயத்துக்களுக்கு தப்ஸீராக இருக்கின்ற ஏனைய ஆயத்துக்களை மெனக்கெட்டு ஒருமுறை பார்த்திருந்தாலே இப்படி மற்றவர்களின் முன்னால் முழங்காலில் வீழ்ந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது." என்றார். பின்னர் "உங்களுக்குத் தெரியுமா? ஜம்மியத்துல் உலமாவின் அறிஞர்கள் குறிப்பிட்டதை விடவும் அபத்தமாக மிக மோசமாக இமாம் இப்னு கதீர் விளக்கம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.அதனை ஒருபோதும் இவர்கள் பேசவே மாட்டார்கள்."
"புரியவில்லை?" என்றேன்.
"பலவீனமான நிலையில் இருக்கின்ற முஸ்லிம்கள் பெரும்பான்மை பலம் பெற்றதன் பின்னர் எங்ஙனம் மக்களை அடிமைப்படுத்துவது என்ற யுத்த தந்திர இரகசிய போதனையை இமாம் இப்னு கதீர் அல் குர்ஆணின் ஆயத்துக்களை அடிக்கோடிட்டு தெளிவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். மக்களை அடக்கியாள தீர்மானிக்கும் அநீதமான இஸ்லாமிய அரசுகளுக்கு உத்வேகம் கொடுக்கும் அத்தகைய கருத்துக்கள் அத்தனையும் புனித அல் குர்ஆணின் போதனைக்கு முற்றிலும் முரணாகும். மற்றது, அவரது ஆதார சான்றுகளில் இத்தகைய அடக்குமுறைக்கு ஆதரவளிக்கும் ஹதீஸ் அறிவிப்புக்களின் அறிவிப்பாளர்களாக -துலக்கா- உயிருக்குப் பயந்து போலியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கடை நிலை ஸஹாபாக்கள் இருகிறார்கள். அத்தனை ஸஹாபாக்களும் பனு உமையா ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.அத்தகைய துலக்கா ஸஹாபாக்களினால் ஒற்றையர் அறிவிப்பாக இருக்கின்ற ஆஹாதான் தர ஹதீஸ்களைக் கொண்டே இமாம் இப்னு கதீர் இப்படியான சட்டங்களை ஆவணப்படுத்தி அதில் நியாயம் கண்டிருக்கிறார். அதனால் அவர் மக்களையும், இக்கால அறிஞர்களையும் தவறான முறையில் நெறிப்படுத்தும் காரியத்தை செய்திருக்கிறார்."
"என்ன மௌலானா சொல்கிறீர்கள்?"
"பொறுத்திருந்துப் பாருங்கள். அடுத்த சில தாசாப்தங்களில் அல்லது சில வருடங்களில் இமாம் இப்னு கதீரையும் அவருக்கு முன்னரான இமாம்களையும் கொண்டாடுகின்ற அறிஞர்களே அவர்களது இமாம்களின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிடுவார்கள். மற்றது, ரசூலுல்லாஹ்வின் மறைவின் பின்னரான முதல் இருநூறு இருண்ட வருடங்களில் இலட்சக்கணக்கான ஹதீஸ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இலட்சக்கணக்கான ஹதீஸ்கள் புனையப்பட்டன. ஆயிரக்கணக்கான அறிஞர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிக இருண்ட காலப்பகுதியான அக்காலத்தில் அஹ்ளுல்பைத்தினருக்கு எதிராக மிக மோசமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய கொடூரமான செயல்களை முன்னெடுத்த உமையா, அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் பகிரங்கமாக பேசுவதற்கு தடுக்கப்பட்ட பல ஆயத்துக்களில் இதுவும் ஒன்று."
"அப்பாஸிய ஆட்சிக்காலத்தை பொன்னான ஆட்சி காலமென்றும், அறிவியலிலும், கட்டிடக் கலையிலும் சிறந்து விளங்கிய ஆட்சியென்றும் அறிஞர்கள் சொல்கிறார்களே?" என்றேன் நான்.
மௌலானா எக்காளமிட்டு சிரித்தார். "யாருக்கு பொன்னான காலம்........அதுவும் சரிதான். இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அது பொன்னான காலம். இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய அறிஞர்களுக்கும் அது இருண்ட காலம். அத்தகைய இருண்ட காலத்தில் அல் குர்ஆணின் சரியான கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டன. அல் குர்ஆணின் போதனையை விளங்கிக்கொள்ள புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட இமாம்கள் மத்கபுகளை அறிமுகம் செய்தார்கள். மத்கபுகளை மலினப்படுத்த அரச ஆதரவு மத்கபுகள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், உற்சாகமாக அரச ஆதரவு ஹதீஸ் தொகுப்புகள் ஒன்று திரட்டப்பட்டன. அதனைக் கொண்டு புதிய புதிய இஸ்லாமிய ஷரிஆ சட்டங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இவை அத்தனையும் புனித அல் குர்ஆணின் சரியான போதனையை விட்டும் மக்களை தூரமாக்கின."
"குழப்பமாக இருக்கிறது மௌலானா?"
"யூதர்களின் இஸ்ராலியட் கதைகள் ஹதீஸ்களுடன் இரண்டறக் கலந்தன. கிரேக்க புராணங்கள், இந்துமத சமஸ்கிருதக் கதைகள், ஆகியன அறபு மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டன.அப்பாஸிய நீதிமன்றங்களில் இவை தாக்கம் செலுத்தும் அளவுக்கு தீர்க்கமாக கொண்டாடப்பட்டன. அக்கால இஸ்லாமிய அரசுகளினால் அவை அறபு இலக்கியங்களாக கொண்டாடப்பட்டன. இவற்றுக்கு நிகராக சில இமாம்கள் அகீதா, இல்முல் ரிஜால், நாஸிக்:மன்சூக் என்று அல் குர்ஆணை முன்னிலைப்படுத்தி சில ஆய்வுகளை அறிமுகப்படுத்தினார்கள். அதன் மூலம் பெறப்படும் முடிவுகளை வைத்து இஸ்லாமிய சட்டங்களை வகுத்தார்கள். அத்தனையும் மக்களிடம் செல்வாக்குபெற அரச ஆதரவு காரணமாக அமைந்தது.ஏனெனில், இவை அத்தனையும் அரச குடும்பத்தை அல்லது அந்த இராஜ்ஜியத்தை பாதுக்காக்கும் முயற்சிக்கு துணையாக இருந்தன."
நான் மெளனமாக இருந்தேன்.
"அல்லாஹ்வின் அருளால் நீங்கள் கேட்ட ஆயத்துக்கான தப்ஸீர் விளக்கத்தை அல் குர்ஆணே தன்னுள் கொண்டிருக்கிறது. அதனை அந்த ஆயத்தின் முன்னைய, பின்னைய ஆயத்துக்கள் தெளிவுபடுத்தி விடுகின்றன."
கேட்ட எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பதில் தெரியாமல் ஓடி ஒளிகின்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு அல் குர்ஆண் அப்படி என்ன விளக்கவுரையை சொல்லப்போகிறது?
(பதிவு நீண்டு விட்டது. மன்னிக்கவும்.....அடுத்த பதிவில் சந்திப்போம்)இன்ஷா அல்லாஹ்.

Comments
Post a Comment