முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் ஆறு! (இமாம் மஹ்தி தொடர்-01)
நுழையும் முன்னர்:
அந்த மாதத்தில் முதலிரண்டு வாரங்களில் யாருக்கும் தெரியாத ஒரு நாளில் இருபத்து இரண்டு வயதான இளைஞன் ஒருவனின் தலையை சவூதி அரசாங்கம் இரகசியமாக துண்டித்துப் போடுகிறது. இரவு பிரதான செய்தி தொலைக்காட்சியில் வருகிறது. உள்துறை அமைச்சு அந்தக் கொலையை இஸ்லாமியக் ஹிராபா குற்றவியல் தண்டனைப் பிரிவில் நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை சமர்பிக்கிறது. அப்பொழுதுதான் அந்த இளைஞனின் குடும்பத்துக்கே விசயம் தெரிகிறது.
நாம் சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத்தைக் கண்டு, அது சொல்லும் சட்டத்தை அறிந்துக் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறோம். இந்த ஆயத் சொல்லும் தண்டனை சம்பந்தமாக முஸ்லிமல்லாத மக்களினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் இஸ்லாமிய அறிஞர்களின் அடர்ந்த மௌனம்தான் இந்தப் பிரச்சினையின் மூலக்கரு.
கேள்விக்குட்படுத்தப்படும் அந்த ஆயத்துக்குக் காரணமான ஹதீஸ்களில் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் நமது அறிஞர் குலாம். அதனால், நமது அறிஞர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அந்த அறிவிப்புக்களில் இருக்கும் இத்துப்போன புனைவுகளை விசுவாசிக்கிறார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஸரிஆ குற்றவியல் சட்டமியற்றி இருக்கிறார்கள். அதன்மூலம் அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு துணை நிற்கிறார்கள்.
நமது அறிஞர்களின் அறியாமை தர்க்கரீதியான கேள்விகளின் முன்னால் நிர்வாணமாக பல்லிளிக்கிறது. அவர்கள் கௌரமாக பொத்திப் பாதுகாத்த ஹதீஸ்கள் கூறும் சம்பவத் துணுக்குகள் கேள்விகளின் முன்னே பொடிப்பொடியாக உதிர்ந்துப் போகத் துவங்கியிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம் முன்னே சோபையிழந்த அனைத்து ஹதீஸ்களும் நமது அறிஞர்களால் ஸஹீஹ் தரத்தில் உச்சியில் கொண்டாடப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஹதீஸ்களாக இருக்கின்றன. இவற்றின் துணையுடன் இஸ்லாமிய ஷரிஆ ஹிராபா சட்டப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்பொழுது கொலை செய்யப்பட்ட இருபத்து இரண்டு வயது இளைஞனுக்கும் சவூதி அரசின் ஹிராபா ஷரிஆ சட்டப்பிரிவின் பிரகாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ரஸூலுல்லாஹ் நடைமுறைப்படுத்திக் காட்டியதாக சொல்லப்படும் ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) வழங்கிய கொடூரமான ஹதீஸ் புனைவுகளுக்கு இங்கு இந்நூற்றாண்டிலும் ஜீவிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தலை கொய்யப்பட்ட துடிதுடிப்பான இளைஞனின் பெயர் முஸ்தபா அல் தர்வீஸ். இரண்டாயிரத்து பதின் ஐந்தில் தர்வீஸுக்கு பதினேழு வயதாக இருக்கும் பொழுது கலகக்கார போராட்டத்தில் ஈடுபட்டான் என்று கைது செய்யப்படுகிறான்.
குடும்பத்தவர்களின் வாக்குமூலம் வேறாக இருக்கிறது. பாதையில் தனது நண்பனுடன் இருந்தபொழுது காவல்துறையினரால் இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். ஆரம்பக் கட்ட விசாரணையின் பின்னர் அன்றிரவே விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களது கைப்பேசிகள் பரிசோதனைக்காக போலீஸ் நிலையத்தில் இருந்திருக்கிறது.
மூன்று நாட்களின் பின்னர் போலீஸில் அலைபேசிகளை எடுத்துச் செல்லுமாறு செய்தி வருகிறது. அதனை எடுக்க போலீஸ் நிலையம் சென்றவுடன் தர்வீஸ் கைது செய்யப்படுகிறான். அவனது போனில் சில புகைப்படங்கள் இருந்ததாகவும், அவை சவூதி அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சிலரது புகைப்படங்கள் என்றும் அவற்றுக்கும் இவனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்ன என்று விசாரணை செய்வதாகவும் விசாரணை முடிய தர்வீஸை விடுதலை செய்வதாகவும் போலீஸ் சொல்கிறது.
அப்படி எதுவுமே நடைபெறவில்லை. தர்வீஸ் கைது செய்யப்படும் பொழுது அவனது வயது பதினேழு. தர்வீஸின் விடுதலைக்கு குடும்பத்தினர் முழுமையாக முயற்சியில் இறங்குகிறார்கள். ஆனால், இதோ இன்று செய்தியில் ஹிராபா சட்டப்பிரிவின் சரத்துப்பிரகாரம் தர்வீஸ் சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கிறான்.
தர்வீஸ் மட்டுமல்ல, அவனுடன் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹிராபா சட்டத்தின் பிரகாரம் சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த செய்தியும் வெளியே கசிவதில்லை. ஆனால், தர்வீஸ் கைது செய்யப்பட்ட செய்தியறிந்த உலக மனித உரிமைகள் அமைப்பு அவனுக்காக வழக்காட முன்வந்தது. அவனது வழக்கு நகர்வுகளை உன்னிப்பாக கண்காணிக்கத் துவங்கியது. அதனால் அவனது தலை சில வருடங்கள் தப்பியிருந்தது. இப்பொழுது துண்டிக்கப்பட்டு மனித உரிமை அமைப்புக்களின் வாயை மூடும் விதமாக தொலைக்காட்சியில் அறிக்கையும் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
௦௦௦௦ ௦௦௦௦ ௦௦௦௦
கப்ர் இடிந்து விழுந்த அஸாத் மௌலானா இப்படி சொன்னார்.
"மனித சமூகம் பூமியில் வாழத் துவங்கியதன் பின்னர் மெது மெதுவாக பிரச்சினைகளும், சண்டை சச்சரவுகளும் உருவாகத் துவங்கின. முரண்பாடுகளின் உச்சமாக முதலாவது உயிர்ப் பலி காவு கொள்ளப்படுகிறது. அந்த சம்பவத்தை அல் குர்ஆண் இப்படி விளக்குகிறது."
"5:27. (நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். இருவரும் "குர்பானி" கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடையது ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால் கோபமுற்ற குர்பானி ஏற்றுக் கொள்ளப்படாதவர் "நிச்சயம் நான் உன்னைக் கொன்று விடுவேன்" என்றார். உடனே மற்றவர் "அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் இறை அச்சமுள்ளவர்களைத்தான்" என்று பதில் கூறினார்.
"அல் குர் ஆண் குறிப்பிடும் கதையின் சுருக்கம் இதுதான் :இறைவனுக்காக குர்பானி- பலி கொடுப்பதில் ஆதம் (அலை) அவர்களது குழந்தைகளில் இருவருக்கு இடையில் நடைபெறுகின்ற போட்டி பின்னர் பொறாமையாக மாறுகிறது. இருவர் அல்லாஹ்வுக்காக குர்பானி- காணிக்கை செலுத்துகிறார்கள். அல்லாஹ்வினால் இருவரில் ஒருவரது குர்பானி -காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதனால் குர்பானி -காணிக்கை மறுக்கப்பட்டவர் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் மீது பொறாமைக் கொள்கிறார். அந்தப் பொறாமையின் காரணமாக குர்பானி- காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டவரை மற்றவர் கொன்றுவிடுகிறார்.
இந்த ஆயத்துக்கு விளக்கம் சொல்லும் தப்ஸீர் விரிவுரையாளர்கள் பல கதைகளை சொல்கிறார்கள். அவற்றில் அதிகமானவை யூதர்களின் கதைகளைத் தழுவிய இஸ்ராலியட் ஹதீஸ்களாகும். அந்தக் கதைகளுக்கு இடையில் வழக்கம் போலவே பெண்ணொருவர் மீது கொண்ட மையலினால் இந்தக் கொலை நடைபெற்றதாகவும் சுவாரஷ்யமாக சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல."
"....... ......... ........."
"நபி ஆதம் (அலை) அவர்கள் அவருக்குப்பின்னரான அவரது பிரதிநிதியாக அவரது வாரிசாக இளையவர் ஆபிலை தேர்ந்தெடுக்கிறார். ஏனெனில், ஆதம் (அலை) அவருக்குப் பின்னர் ஆபிலே தலைமைத்துவத்துக்கும் நபித்துவ வாரிசுரிமைக்குப் பொருத்தமானவராகவும் கருதுகிறார்.
"தந்தையின் அந்நியமனத்தை மூத்தவரான காபில் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரச்சினை உருவாகிறது. அதனைத் தீர்க்க ஹசரத் ஆதம் (அலை) புதல்வர்களிடம் அடுத்தநாள் இருவரும் அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுக்குமாறு பணிக்கிறார். இருவரில் யாருடைய குர்பானி அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ அவரே அவரது பிரதிநிதி அல்லது அவருக்குப் பின்னரான அவரது வாரிசாக கருதப்படுவார் என்று அறிவிக்கிறார்.
"தந்தையின் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட புதல்வர்கள் அடுத்தநாள் காலையில் அவர்களது குர்பானியை கொண்டுவருகிறார்கள். ஆபில் தன்னிடமிருந்த ஆடுகளில் கொழுத்த செம்மறி ஆடொன்றை அறுத்துக் கொண்டுவருகிறார். காபில் வாடிய சோளக் கதிர் கட்டொன்றை கொண்டுவருகிறார். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க அவற்றை அவர்கள் ஆதம் (அலை) அவர்களின் முன்னால் படைக்கிறார்கள்.
"சிறிது நேரத்தில் வானிலிருந்து வெளிப்பட்ட ஒரு தீபந்து ஆபிலின் குர்பானியை எரித்து சாப்பிட்டு விடுகிறது. காபிலின் சோளக் கதிர்கள் கவனிப்பாரற்று அப்படியே இருக்கின்றன. இதன் அடிப்படையில் இறைவன் காபிலின் குர்பானியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முடிவு செய்யப்படுகிறது.
"கோபத்துடன் அவ்விடத்தை விட்டும் காபில் வெளியேறுகிறார். அவர் இறைவனின் இந்தத் தீர்ப்பை அல்லது இளையவர் ஆபிலின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாள்களில் அவர் அவரது சகோதரரான ஆபிலைக் கொலை செய்துவிடுகிறார். பின்னர் அவரது ஆதரவாளர்களுடன் ஏடன் நகருக்கு சென்றுவிடுகிறார். அங்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் நெருப்பை இறைவனாக வணங்கத் துவங்குகிறார்கள். நெருப்பை வணங்கும் மஜூஸிகள் இப்படித்தான் உருவானார்கள்.
"ஆபிலின் இழப்பால் ஹசரத் ஆதம் (அலை) வருந்துகிறார். அவர் இறைவனிடம் அவருக்குப் பின்னர் அவரது வாரிசாக இருக்கும் தகுதியுடைய ஒரு குழந்தையைக் கேட்கிறார். அதன் பின்னர் அவருக்கு ஸீத் (அலை) பிறக்கிறார். ஆபிலுக்குப் பகரமாக ஆதம் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்ட அவரது சமூகத்தவர்களது பிரதிநிதியாக அல்லது வாரிசாக ஸீத் (அலை) நியமிக்கப்படுகிறார்."
இதனைக் கேட்டவுடன் நான் இப்படி சொன்னேன். "இந்தக் கதைகளை வேறு விதமாகக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஆதம் (அலை) அவர்களுக்குப் பின்னரான நபித்துவ வாரிசு அல்லது பிரதிநிதி சம்பந்தமான பிரச்சினை என்ற கதை புதிதாக இருக்கிறது."
"இறைவனுக்கு மாறு செய்தல் எனபது அவனது வேத சட்டங்களுக்கு அல்லது கட்டளைகளுக்கு முரணாக செயல்படுவதாகும். இறைவனது தூதருக்கு மாறு செய்தல் எனபது அவரது கட்டளைகளை அலட்சியம் செய்து நடப்பதாகும். இறைவனுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போராட்டம் எனப்படுவது ஒரு தூதரினால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது வாரிசாக அறிவிக்கப்படும் அல்லது நியமிக்கப்படும் அவரது பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு முரணாக நடப்பதாகும். முதலாவது மனிதப்படுகொலையின் பிரதான காரணம் அதுதான்."
"அப்படியானால், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போராட்டம் அப்பொழுதே துவங்கி விட்டது. இல்லையா?"
"ஆம்....... அதன் பின்னரான பல்லாயிரம் வருடங்கள் கடந்து செல்ல பனு இஸ்ரவேலர்களின் காலம் துவங்குகிறது. பனு இஸ்ரவேலர்கள் ஹசரத் யாகூப் (அலை) அவர்களது பன்னிரண்டு குழந்தைகளின் வம்சாவளியினராக இருக்கிறார்கள். நபித்துவ வாரிசு சம்பந்தமான முரண்கள் அங்கும் தொடர்கின்றன. நபிமார்களைக் கொலை செய்யும் கலாசாரம் அந்தக் குடும்பத்தினரிடையேயும் இருந்து வந்திருக்கிறது. யூசுப் (அலை) அவர்களின் கதையை நீங்கள் அறிவீர்கள். பனு இஸ்ராயில்களின் சந்ததிகளில் வந்த அத்தனை நபிமாரும் கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்களது ஹதீஸ் கிரந்தங்களில் அல்லது வேத நூல்களில் இது சம்பந்தமான கதைகள் இட்டுக்கட்டப்பட்டு அல்லது சோடிக்கப்பட்டு வேறு விதமாக பதிவாகி இருக்கின்றன. அனைத்தும் அல்லாஹ்வின் தூதர்களில் களங்கம் கற்பிக்கும் விதமாகவே பதிவாகியிருக்கின்றன. பனு இஸ்ராயில் சமூகத்தவர்களின் மனிதப் படுகொலைகளுக்கும், கொலைகளுக்குமான தண்டனையாக விதித்த தீர்ப்பை அல்லாஹுத்தஆலா அல் குர்ஆணில் இப்படி சொல்கிறான்.
"5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
"அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான பல கலகங்களில் அல்லது போராட்டங்களில் முக்கியமானது பனு இஸ்ராயில்களின் ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது தலைமைத்துவத்தை ஏற்காமல் அவரை அவர்கள் கொலை செய்த நிகழ்வாகும். ஏனெனில் அக்கால பனு இஸ்ராயில்களின் இறைவனுக்கு எதிரான யுத்தத்துக்கும், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது உம்மத்தினரின் இறைவனுக்கு எதிரான யுத்தப் பிரகடனத்துக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது."
"என்ன சொல்கிறீர்கள் மௌலானா?......பனு இஸ்ராயில்கள் ஹசரத் யஹ்யா (அலை) அவர்களுக்கு எதிராக கலகம் செய்தார்களா? அவர்களது கலகம் போலவே ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது உம்மத்தினரும் கலகம் செய்தார்களா?"
"ஆம். செய்தார்கள். அன்னை மரியம் ஸலாமுன் அலைஹாவின் பொறுப்பாளராக ஹசரத் சக்கரியா (அலை) இருந்த கதையை நீங்கள் அறிவீர்கள். அவர் அன்னை மரியம் ஸலாமுன் அலைஹா இருக்கும் மிஹ்ராபை அடைந்த பொழுதெல்லாம் அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருப்பதைக் காண்கிறார். கோடைக் காலத்தில் குளிர்கால பழவகைகளும் குளிர்காலத்தில் கோடைக்கால பழவகைகளும் அவரை ஆச்சரியப்படுத்தின. இந்த உணவுகளை யார் தந்தது என அவர் அன்னையவர்களிடம் கேட்க அன்னையவர்கள் 'என்னுடைய அல்லாஹ்விடமிருந்து இவை கிடைக்கின்றன' என்று கூறியிருக்கிறார். உடனே ஹசரத் சக்கரியா (அலை) அன்னை மரியம் ஸலாமுன் அலைஹா இருக்கின்ற அவ்விடத்திலேயே அல்லாஹ்விடம் இருகரமேந்தி தனக்கொரு மகனை வாரிசாக தருமாறு பிரார்த்திக்கிறார். அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளபப்டுகிறது. ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது பிறப்பு சம்பந்தமாக நன்மாராயம் சொல்லப்படுகிறது.
"சில வருடங்களில் வயோதிகரான ஹசரத் சக்கரியா (அலை) தம்பதியினருக்கு ஹசரத் யஹ்யா (அலை) பிறக்கிறார்கள். சுமார் ஏழு அல்லது எட்டு வயதிலேயே அவருக்கு நபித்துவ ஞானம் அருளப்படுகிறது. இந்த நியமனத்தை பனு இஸ்ராயில்களின் மதகுருமார்களான ரப்பானிகள் நிராகரிக்கிறார்கள். வேதத்தின் ஏக போக உரிமையாளர்களாக அவர்கள் தங்களை வரிந்துக் கொள்கிறார்கள். அவர்களின் சதியின் காரணமாக யஹ்யா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்ட சுமார் நானூறுக்கும் அதிகமான சிஷ்யர்கள் ஒரே இடத்தில் கூட்டாக கொலை செய்யப்படுகிறார்கள்.
"ஆனால், அந்தக் கதைகளை ஸாபிஈன்களின் மதகுருமார் வேறு விதமாக சொல்லத் துவங்கினார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்ததற்காக யஹ்யா (அலை) அவர்களின் கட்டளைக்கு இணங்க அவர்கள் தம்மைத் தாமே கொலை செய்துக் கொள்ளும் தௌபாவை செய்தார்கள் என்று அவர்களது ஹதீஸ்கள் அந்த அநியாயக் கொலைகளுக்கு சமாதானம் சொல்கின்றன.
"இதன் உச்சக்கட்ட கொடுமையாக ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது தலை துண்டிக்கப்பட்டு அந்நாட்டு மன்னனுக்கு தங்கத் தட்டில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தக் கொலைக்கு பனு இஸ்ராயில்களினதும் நமது இஸ்லாமிய மத குருமார்களும் ஒருமித்த கருத்தொன்றை முன்வைக்கிறார்கள். மன்னன் அவனது தங்கை முறையான பெண்ணொன்றை திருமணம் செய்ய தீர்மானித்தானாம். அதற்கு இஸ்லாமிய பத்வாவை ஹசரத் யஹ்யா (அலை) அவர்களிடம் கேட்டானாம். ஹசரத் யஹ்யா (அலை) அந்தத் திருமணம் ஹராமானது என்றும் அதற்கு அனுமதி கிடையாது என்றும் பத்வா வழங்கினார்களாம். அதனால் கோபமுற்ற மன்னன் ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது சிரசை துண்டிக்க உத்திரவு பிறப்பித்தானாம். அதனால், அவரது தலை வேறாக துண்டிக்கப்பட்டதாம்.
"ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது தலையைப் போலவே ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹுசைனின் தலையும் துண்டாடப்படுகிறது.வெள்ளித்தட்டில் வைத்து யஸீத்துடைய இராஜ தர்பாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது." என்று கூறிவிட்டு அஸாத் மௌலானா மௌனமானார்.
நான் காத்திருந்தேன்.
"இமாம் ஜைனுல் ஆப்தீன் ஸலாமுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தந்தையுடன் கர்பலா நோக்கி செல்லும் பொழுது இமாம் ஹுசைன் அடிக்கடி ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது கதைகளை சொல்லிக் கொண்டு வந்தாராம். அதில் அவரது தலை துண்டிக்கப்பட்ட கதையை நாள் தவறாமல் சொல்லி வந்தாராம். இமாம் ஜைனுல் ஆப்தீன் தனது தந்தை இந்தக் கதையை ஏன் சொல்கிறார் என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்திருக்கிறார். இறுதியில், இமாம் ஹுசைனின் தட்டில் வைக்கப்பட்ட தலை யசீதின் மாளிகையில் கொண்டு வந்து வைக்கப்பட்டதும் அவருக்கு தனது தந்தை ஹசரத் யஹ்யா(அலை) அவர்களது கதையை சொன்னதற்கான காரணம் தெரிந்து போயிருக்கிறது. இமாம் ஹுசைனின் தலை வைக்கப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில்தான் இமாம் யஹ்யா (அலை) அவர்களது தலையை நல்லடக்கம் செய்த இடம் இருந்திருக்கிறது."
கேட்டவுடன் மனத்தில் ஓரமாக வலிக்கத் துவங்கியது. கண்களில் நீர் திரையிட்டது. சூழலில் படர்ந்த சோகத்தை மறைக்க அர்த்தமில்லாமல் இப்படியொரு கேள்வியைக் கேட்டுக வைத்தேன்."ரப்பானிகள் ஹசரத் யஹ்யா (அலை) அவர்களைக் கொலை செய்யக் காரணம் என்ன?"
"ஹசரத் யஹ்யா (அலை) அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஸபூர் வேதத்தைப்பின்பற்றிய ஸாபிஈன்களாக இருந்தார்கள். இஸ்ரவேலர்களின் மதகுருக்கள் இளம் வயதில் வேத ஞானம் கொடுக்கப்பட்ட யஹ்யா (அலை) அவர்களுடன் பொறாமைக் கொண்டிருந்தார்கள். வேதத்தின் ஏகபோக உரிமையாளர்களாக அவர்கள் தம்மை நினைத்துக் கொண்டார்கள். அந்த அதிகாரத்துக்கு சவாலாக ஹசரத் யஹ்யா (அலை) அவர்களின் தெய்வீக நியமனம் இருந்தது. அதனால், அவர்கள் தந்திரமாக முதலில் யஹ்யா (அலை) அவர்களின் ஆதரவாளர்களைக் கொலை செய்தார்கள். யமாமா கொலைக்களத்தில் ஆயிரத்து நானூறு ஸ ஹாபா ஹாபிழ்கள் கொலை செய்யப்பட்டதைப் போல என்று சொல்லலாம். பின்னர் ஹசரத் யஹ்யா (அலை) அவர்களைக் கொலை செய்தார்கள்."
இதனைக் கேட்டதும் நான் "அஸாத் மௌலானா......... பனு இஸ்ராயில்களின் ஹசரத் யஹ்யா (அலை) அவர்களது கொலைக்கும் நமது அறிஞர்களைக் குழப்பி விட்டிருக்கும் சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத்துக்கும் தொடர்பிருக்கிறதா?"
"ஏன் இல்லை?" என்ற அஸாத் மௌலானா இப்படிக் கேட்டார். "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போரை முதலில் துவக்கி வைத்தது யார்?"
நான் இதனை, சட்டென்ற இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை.
சமாளிக்க இப்படி சொன்னேன். "புனித அல் குர்ஆணின் போதனையின் பிரகாரம் மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்று பின்னர் முர்த்தத்தாக மாறி ஒட்டகை காவலாளியைக் கொலை செய்து ஒட்டகைகளை ஓட்டிச் சென்ற உரைய்னா அல்லது உர்வா கோத்திரத்தார்."
"அப்படியென்றால் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவரது அல்லாஹ்வுக்கும் எதிரான முதலாவது கலகத்தை ஆரம்பித்த காபிலின் செய்கை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போராட்டம் இல்லையா? பனு இஸ்ராயில்களில் வந்த இறைத் தூதர்களுக்கும் அவர்களது அல்லாஹ்வுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்த பனு இஸ்ராயில்களின் செய்கை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போராட்டம் இல்லையா?" என்றவர் நிறுத்தி நிதானமாக கனத்த குரலில் இப்படிக் கேட்டார். " இறுதித் தூதர் ரஸூலுல்லாஹ்வுக்கும் அவரது அல் குர்ஆணிய போதனைகளுக்கும் எதிராக இஸ்லாமிய போர்வை போர்த்தி முஸ்லிம்களுடன் ஒன்றாக கலந்திருந்த அறபு மக்களது செய்கை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போராட்டம் இல்லையா?"
நான் அமைதிக் காப்பது உசிதமென்று உணர்ந்தேன். மெளனமாக இருந்தேன்.
"ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மறைவுடனேயே ரஸூலுல்லாஹ்வின் உம்மத்தினர் அவரது வாரிசாகவும், பிரதிநிதியாகவும் நியமித்த இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி அவர்களது தலைமைத்துவ நியமனத்தை மறுத்த செய்கையை எதில் கொண்டு சேர்ப்பது? ரசூலுல்லாஹ்வின் மறைவின் பின்னர் அந்தக் குடும்பத்துக்கு உரித்தான, முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நியமனத்தை தூக்கி எறிந்த நபித்தோழர்களின் செய்கையை எதில் கொண்டு சேர்ப்பது? அதன் பின்னராக நடந்தேறிய துர்பாக்கிய சம்பவங்கள் அத்தனையையும் எதில் கொண்டு சேர்ப்பது? பொய் நபிமார்களுக்கு எதிரான யுத்தம், சக்காத் வழங்க மறுத்தவர்களுக்கு எதிரான யுத்தம், மதம் மாறியவர்களுக்கு எதிரான யுத்தம் என்று வலிந்து திணிக்கப்பட்டு தொடராக நடைபெற்ற மனிதப் படுகொலைகளை எதில் கொண்டு சேர்ப்பது?
"ஓரிரவில் படுகொலை செய்யப்பட்ட மாலிக் பின் நுவைராவின் குடும்பத்தை சேர்ந்த பதினேழு ஆண்களின் கொலைகளை எதில் கொண்டு சேர்ப்பது? படு கொலை செய்யப்பட அன்றிரவே அவரது மனைவியை கற்பழித்த ஹசரத் காலித் இப்னு வலீதின் கொடுமையை எதில் கொண்டு சேர்ப்பது? யமாமா கொலைக்களத்துக்கு அழைத்து செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆயிரத்து நானூறு ஹாபில் சஹாபாக்களின் படு கொலைகளை எதில் கொண்டு சேர்ப்பது?
"கர்பலாவில் இமாம் ஹுசைனின் சிரசை துண்டித்த செய்கையை எதில் கொண்டு சேர்ப்பது?ஹர்ரா யுத்தத்தில் நீக்ரோ படையினருக்கு மூன்று நாட்கள் ஹலாலாக அனுமதிக்கப்பட்ட மதீனா நகரின் அவலத்தை எதில் கொண்டு சேர்ப்பது?அந்த மூன்று நாள்களும் இமாம் ஹுசைனின் படுகொலையை எதிர்த்து களமிறங்கி போராடிய சுமார் பத்தாயிரம் சஹாபா பெருமக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான சஹாபா பெண்மணிகள் கற்பழிக்கப் படுகிறார்கள். இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போராட்டங்கள் இல்லையா?"
நான் பேச்சிழந்து நின்றேன்.
"இத்தனை கொடுமைகளை செய்யும், செய்யப்போகும் செய்த மக்களுக்கு எத்தகைய தண்டனையை அல்லாஹ் தீர்ப்பளித்திருக்கிறான் என்பதைத்தான் சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத் விளக்குகிறது. அந்த ஆயத் என்ன சொல்கிறது என்று கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்."
நான் அல் குர்ஆணில் அந்த ஆயத்தைப் புரட்டினேன்.
"5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு."
அஸாத் மௌலானா தொடர்ந்தார் "இந்த ஆயத் கட்டளையிட்டிருக்கிற குற்றவாளிகள்தாம் அப்பொழுது ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தார்கள்.அவர்களது கண்காணிப்பிலேயே சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத்துக்கான விளக்கங்கள் எழுதப்பட்டன. அவை இஸ்லாத்துக்கு எதிரான அரச ஆதரவு மதரசாக்களில் போதிக்கப்பட்டன. இஸ்லாத்துக்கு எதிரான அரச ஆதரவு ஹதீஸ் கிரந்தங்களில் எழுதப்பட்டன. அந்தக் குற்றவாளிகள் மக்களின் கவனத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவே உரைனா கோத்திரத்தாரின் ஓட்டகைக் கொளையர்களின் கதையை புனைந்தார்கள். கொடூரமான முறையில் அந்தத் தண்டனைகளை ரஸூலுல்லாஹ் (ஸல்) செய்தார்கள் என்று சொல்லத் துவங்கினார்கள். அதன் மூலம் குற்றவாளிக் கூண்டில் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை நிறுத்தி தாம் தப்பிக் கொண்டார்கள்."
"அப்படியானால் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இந்த ஆயத்துக்கு என்ன விளக்கம் என்று சொல்லவில்லையா?"
"சொன்னார்கள். நிச்சயமாக சொல்லியிருப்பார்கள். நடைமுறைப்படுத்திக் காட்டவில்லை. ஏனெனில், அந்த ஆயத்துக்கான சட்டத்தை அமுல் நடாத்தக் கூடிய இஸ்லாமிய ஆட்சி ஒன்று அப்பொழுது அதிகாரத்தில் இருக்கவில்லை. அதன்பின்னரும் அதிகாரத்துக்கு வரவில்லை. அதனால், அந்த ஆயத்துக்குரிய சட்டத்தை அமுல் நடாத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. இஸ்லாத்துக்கு எதிரான கூட்டணி ஆட்சியில் இருந்ததால் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சம்பந்தமான உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.
"மௌலானா?.........ஆட்சியில் இருந்த இஸ்லாமிய அரசுகள் அத்தனையும் அல் குர்ஆணின் போதனைக்கும் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைக்கும் முரணாக ஆட்சி செய்தார்கள் என்று கூறுகிறீர்களா?"
"ரஸூலுல்லாஹ் (ஸல்) அல் குர்ஆனை போதனை செய்தார்கள். வாழ்ந்தும் காட்டினார்கள். அல் குர்ஆணின் ஆயத்துக்களுக்கான விளக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவரது போதனைகளை முற்று முழுதாக அமுல் செய்யும் வகையிலான ஆட்சியை அமைக்க அல்லது செய்வதற்கு அவருக்கு வாய்ப்பிருக்கவில்லை. அதனால் இஸ்லாமிய போதனையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியை செய்யும் காலநேரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
"ஆனாலும், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தூரநோக்குடன், அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க இமாம் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது பொறுப்பில் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தை கதீர் கும்மில் பிரகடனப் படுத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது தோழர்கள் என்று அறியப்பட்ட பிரபலங்களால் இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி அவர்களுக்கும் கொடுக்கப்படவில்லை.
"அதனால், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது மறைவின் பின்னரான இருபத்து ஐந்து வருடங்களும் அல் குர்ஆணின் போதனைக்கும் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது கட்டளைக்கும் முரணான ஆட்சியே நடைபெற்றது. ஆனால், அதன் பெயரும் இஸ்லாமிய ஆட்சி என்றுதான் இருந்தது. இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி அவர்களது நான்கு வருட ஆட்சியையும் அல் குர்ஆணின் போதனைக்கு அமைய ஆட்சி செய்ய அமீர் முஆவியாவின் கலகக்காரக் கும்பல் விடவில்லை. அதன் பின்னரான ஆட்சியாளர்கள் அத்தனைபேரும் ரோம, பாரசீக அரசர்கள் போலவே ஆட்சி செய்தார்கள். அவர்களது ஆட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்ள இஸ்லாம் மார்க்கத்தை உபயோகித்துக் கொண்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள்."
"இஸ்லாமிய ஆட்சிக்கான வாய்ப்பே இல்லையா?"
"இன்ஷா அல்லாஹ் அத்தகைய ஆட்சி இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகைக்குப் பின்னர் சாத்தியமாகும். அப்பொழுது யாரெல்லாம் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்கிறார்களோ அத்தகைய கலகக்காரர்களுக்கு இந்தத் தண்டனையை இமாம் மஹ்தி (அலை) தீர்ப்பளிப்பார். அதனால்தான் இந்த ஆயத்தை கருத்திற்கொண்டு ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களோ, இமாம் அலி ஸலாமுல்லாஹி அவர்களோ சட்டரீதியான எவ்வித முன்னெடுப்புக்களையும் அவர்களது காலத்தில் செய்யவில்லை. அதே போல இமாம் மஹ்தி (அலை) அவர்களின் மீள் வருகை வரும் வரைக்கும் அல் குர்ஆணின் சில ஆயத்துக்கள் பரிந்துரைத்திருக்கும் சில சட்டங்களை அமுல் நடாத்தக் கூடிய அதிகாரத்தில் எவ்விதமான இஸ்லாமிய அரசும் ஆட்சியில் இருக்கப்போவதில்லை."
கேட்ட நான் மௌனமானேன். இமாம் மஹ்தி (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாமிய அறிஞர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். இமாம் மஹ்தி (அலை) என்றொருவரை தெரியாத இஸ்லாமிய அறிஞர்களும் நம்முடனேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இமாம் மஹ்தி எனபது ஒரு கற்பனைக் கோட்பாடு என்று சொல்லும் அஹ்லுல்பைத் ஆதரவாளர்கள் என்று தம்மை அழைக்கும் ஷீஆ அறிஞர்களும் நம் மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவல்லாமல், அக்குரணை மன்சூர் மௌலவியின் சிஷ்யர் ஒருவர் ஒருமுறை என்னிடம் இப்படி சொன்னார்.
"இமாம் மஹ்தியா? பயாஸ் நானா....உங்களுடைய இமாம் அவரா? இமாம் மஹ்தி என்றொருவர் பிறக்கவில்லை. பிறக்கப்போவதும் இல்லை. அப்படி பிறந்து வந்தாலும் பிரச்சினையில்லை. நாம் அவரது தலைமையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை."
என்னிடம் இருப்பதெல்லாம் ஒரு கேள்விதான்.
இந்தக் கூட்டணியினரிடம் சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் இலக்க ஆயத்துக்கு என்ன பதில் இருக்கிறது?
ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் விதித்த கொடூரமான தண்டனை சம்பந்தமான ஸஹீஹான ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானவை என்று சொல்வார்களோ? சொல்லக் கூடும்.
நண்பர்கள் தயவுடன் கெட்டு சொல்லுங்கள்.
அஸ் ஸுன்னா அடிப்படையில் முதலில் அவர்கள் ஏதாவது பதிலை சொல்லட்டும். அப்படி சொன்னதன் பின்னர் நான் பதிலை சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

Comments
Post a Comment