முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் ஐந்து- (இமாம் மஹ்தி- தொடர் 01)
நுழையும் முன்னர்:
இந்தப்பயணத்தில் நாம் சில அறிஞர்களை கடந்து வந்திருக்கிறோம். சிலரை நேரடியாக சந்தித்திருக்கிறோம். கடந்து வந்தவர்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். முதலாவது இமாம் இப்னு கதீர். இவர் ஹிஜ்ரி (7௦1) எழுநூறுகளில் வாழ்ந்திருக்கிறார். (கி,பி. 13௦௦.)
அஸ் ஸுன்னா அறிஞர்களில் இவர் மிக முக்கியமானவர். ஏனெனில், இவருக்கு முன்னர் வாழ்ந்த அஸ் ஸுன்னா இஸ்லாமிய அறிஞர்களின் அத்தனைக் கருத்துக்களையும் இவர் தன்னுடைய அல் குர்ஆணிய விளக்கவுரைக் கிரந்தத்தில் பதிந்திருக்கிறார். அவருக்குப் பின்னர் அவர் ஒன்றுதிரட்டிய கிரந்தத்தை ஒத்த இன்னொரு கிரந்தத்தை இதுவரை யாருமே எழுதியதில்லை. அவருக்குப் பிறகு வந்த அத்தனை அறிஞர்களும் தங்களது ஆதார சான்றுகளுக்கு இமாம் இப்னு கதிரின் கிரந்தத்தையே மேற்கோள் காட்டுவார்கள்.
இமாம் இப்னு கதிரைப் போலவே ஷீஆ அறிஞர்களில் முக்கியமானவர் அல்லாமா தபதபாயி. சென்ற நூற்றாண்டு அறிஞரான இவர் ஒன்றுதிரட்டி எழுதி முடித்த அல் மீஸான் அல் குர்ஆணிய விளக்கவுரைக் கிரந்தத்தைப் போன்றதொரு தப்ஸீர் கிரந்தத்தை ஷீஆ அறிஞர்களில் யாருமே எழுதியதில்லை. சில பொது இருந்திருக்கலாம். ஆனால், அல் மீஸான் கிரந்தத்தைப் போல எதுவுமே பேசப்படவில்லை.
இந்த இரண்டு அறிஞர்களும் இஸ்லாமிய உலகில் இருக்கின்ற அத்தனை அறிஞர்களினாலும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட முபஸ்ஸிரீன்களாக இருக்கிறார்கள். அல் குர்ஆணில் நிபுணத்துவம் பெற்றவர்களை முபஸ்ஸிரீன்கள் என்று அழைப்பார்கள். இருவரும் முகத்திஸீன்களாக இருக்காத காரணத்தால் அவர்கள் பதிந்த ஹதீஸ்களில் தராதரத்தை, அவற்றின் நம்பகத்தன்மையை அவை சார்ந்த மெலிதான நிரடல்களை அவர்கள் அவதானிக்கவில்லை. அதனால், அவற்றை அவர்கள் பூரண ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றே நான் கருதுகிறேன்.
என்னுடைய பதிவுகளின் போக்கை அவதானிக்கும் நீங்கள் கௌரவத்துக்குரிய இந்த அறிஞர்களை நான் விசாரணைக் கூண்டில் நிறுத்துவதாக தப்பாக அர்த்தம் கொள்ளவேண்டாம்.
சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத்துக்கான இஸ்லாமிய உலகின் விளக்கங்களை ஒட்டு மொத்தமாக அறிந்துக் கொள்ள இந்த இரண்டு அறிஞர்களும் துணை நிற்கிறார்கள். அவ்வளவுதான். இவர்களது பரந்துபட்ட விளக்கத்தில் அல்லாஹ்வும், அவனது வேத நூலும் அதனை நமக்குக் கற்றுத்தந்த ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் உலக மக்களின் பார்வையில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலைமை தோன்றியிருக்கிறது.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் இறுதி இறை வேத நூலான அல் குர்ஆணுக்கும் எதிரான இந்தக் கருத்தை துகிலுரிக்க இந்த இமாகளின் கருத்து பிழையானது என்பதை மக்கள் மன்றில் நிரூபிக்க வேண்டியுள்ளது.
மகத்துவமிக்க அந்த வாய்ப்பை நல்கிய எனது இரட்சகன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகும்.
இனி சென்றவாரம் இடம்பெற்ற (20/03/2023) பிரபலமான ஷீஆ அறிஞர் ஒருவருடனான இந்த அமர்வை கவனியுங்கள்.
"குலபாயே ராஷிதீன்களின் காலத்தில் இஸ்லாமிய ஸரிஆ- குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றிய ஒரே நபர் இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி மாத்திரமே. மனோதிடம் நிறையப்பெற்றிருந்த அவரால் மாத்திரமே கல்லெறி தண்டனையாகட்டும், கைகளைத் துண்டிக்கும் தண்டனையாகட்டும், மது அருந்தியவர்களுக்கு கசையடி வழங்கும் தண்டனையாகட்டும் அனைத்தையும் எவ்வித பாரபட்சமுமின்றி துணிவுடன் நிறைவேற்ற முடிந்தது."
கேட்டதும் கொஞ்சம் அதிர்ந்துப் போனேன். மனக்கண்ணில் சவூதியில் மரண தண்டனையை நிறைவேற்றும் திடகாத்திரமான உயர்ந்து வளர்ந்திருந்த 'அலுகோசு' பளீரென்ற வெள்ளை ஜுப்பாஹ்வுடன் கையில் பளபளக்கும் வாளுடன் அச்சுறுத்தினார். இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி அந்த நபரைப் போலவே அப்பாவி மக்களை அச்சுறுத்தி குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களின் சிரசை அலாக்காக துண்டித்துப் போட்டாரா?
கால் மடித்து அமைதியாக அந்த ஷீஆ இஸ்லாமிய அறிஞர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த என்னுடைய பொறுமை எல்லைக் கடந்த நேரம் அது.
அல் குர்ஆணின் அத்தியாயம் ஐந்து ஆயத் முப்பத்து மூன்று என்ன சொல்கிறது என்ற ஆய்வுப் பயணத்தில் நான் சந்தித்த ஷீஆ அறிஞர் இவர். என்னுடைய நண்பர் ஒருவர் என்னை இந்த அறிஞரின் வருகையை எனக்கு அறிவித்தார். 'பயாஸ்.......நீங்கள் உங்களது தேடலுக்கான விடையை இந்த அறிஞரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இவர் ஈராக் தேசத்தின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் ஷிஷ்தானியின் அலுவலகத்தில் இருந்து விசேஷமாக இலங்கை வந்திருக்கிறார்.' என்று அந்த நண்பர் அலைபேசியில் சொன்னார். கேட்ட அடுத்த நாள் இதோ இப்பொழுது அந்த ஷீஆ அறிஞரின் முன்னால் அமர்ந்திருக்கிறேன்.
என்னைப்பற்றி, எனது தேடலைப்பற்றி அவருக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. சம்பிரதாய அறிமுகப்படலம் முடிந்தவுடன் முறுவலுடன் கேட்டார்."அல் குர்ஆணில் உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறது ப்ரதர்?"
நாம் கடந்த ஒரு மாதமாக உரையாடிக் கொண்டிருக்கும் விடயங்களின் மூலக் கேள்வியைக் கேட்டேன். "சூறா மாஇதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத் அருளப்படக் காரணமாக சொல்லப்படுகின்ற கதை. நிஜமாகவே அப்படியொரு சம்பவம் நடைபெற்றதா? ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அத்தகைய கொடூரமான தண்டனையை நிறைவேற்றினார்களா?"
அந்த அறிஞர் விடையை சொல்லத் துவங்கினார். அனைத்தும் அஸ் ஸுன்னா இமாம் இப்னு கதிரும், ஷீஆ அறிஞர் அல்லாமா தப தபாயி ஆகிய பெருந்தகைகளின் தப்ஸீர் விளக்கவுரைக் கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் கதைகள்தாம். அல்லாஹ்வின் அருளால் அந்த அறிஞரை விட அவற்றை என்னை வாசிக்கும் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அதனால், அவர் உரையாடுகின்ற நேரத்தில் அவசர அவசரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுகிறேன்.
அந்த அறிஞரின் பெயர் மௌலானா ஷேய்க் மிர்ஸா ஆபித் அலி. துடி துடிப்பான வாலிபர். ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இந்தியாவில் இஸ்லாமிய கலாசாலை ஒன்றில் ஆரம்ப மார்க்கக் கல்வியைக் கற்றிருக்கிறார். அதன் பின்னர் ஈரான் கும் நகரில் தனது கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். பிறகு சிரியா சென்று அவரது பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். பின்னர் லெபனான் பேரூட் நகர் ஜாமியா மஸ்ஜிதில் இமாமாக பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.
இவரைப் பற்றி, இவரது திறமையைப் பற்றி அறிந்துக்கொண்ட ஈராக் நகரின் முக்கிய ஆயத்துல்லாக்களில் ஒருவரான ஆயதுல்லாஹ் ஷேய்க் முஹம்மத் யாகூபி அவர்கள் இவரை தனது அலுவலக இந்திய பிரதிநிதியாக பணியாற்ற அழைத்திருக்கிறார். அதனை ஏற்ற இவர் இப்பொழுது ஆயதுல்லாஹ் யாகூபியின் அகில இந்திய பிரதிநிதியாக கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது அலுவலகம் ஹைதராபாத்தில் இருக்கிறது. ஆயத்துல்லாஹ் ஷிஸ்தானியின் விசேட பணிப்புரையின் கீழ் சென்றவாரம் இலங்கை வந்திருக்கிறார்.
ஆயதுல்லாஹ் ஷேய்க் முஹம்மத் யாகூபி ஆயதுல்லாஹ் ஷிஸ்தானியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர். ஆயதுல்லாஹ் ஷிஸ்தானி இராக் நகரின் ஆன்மீகத் துறையிலும், அரசியலிலும் பெரும் ஆளுமை செலுத்தும் தலைவராக இருக்கிறார். அவரது கருத்துக்களால் கவரப்பட்டவர்களில் இலங்கை அக்குரணை மன்சூர் மௌலவியும் ஒருவர்.
ஷேய்க் மிர்ஸா ஆபித் அலி பேசி முடித்துவிட்டார்.
நான் கேட்டேன். "ஓட்டகைக் கொள்ளையர்களின் தண்டனையை நிறைவேற்றியவர் இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி என்ற செய்தி சரியானதா?"
இந்தக் கேள்விக்கு முதல் பாராவில் நீங்கள் வாசித்த காரணத்தை ஷேய்க் மிர்ஸா கூறினார். இருந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்வோம்."குலபாயே ராஷிதீன்களின் காலத்தில் இஸ்லாமிய ஸரிஆ- குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றிய ஒரே நபர் இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி மாத்திரமே . ஏனெனில்,இமாம் அலி ஸலாமுல்லாஹி அவர்களிடம் மனோதிடம் நிறையப்பெற்றிருந்தது. அவரால் மாத்திரமே கல்லெறி தண்டனையாகட்டும், கைகளைத் துண்டிக்கும் தண்டனையாகட்டும், மது அருந்தியவர்களுக்கு கசையடி வழங்கும் தண்டனையாகட்டும் அனைத்தையும் எவ்வித பாரபட்சமுமின்றி துணிவுடன் நிறைவேற்ற முடிந்தது."
"அதாவது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது காலத்திலும், குலபாயே ராஷிதீன்களின் காலத்திலும் அலுகோசு வேலையை இமாம் பார்த்தார் என்கிறீர்கள்.?"
அலுகோசு என்று நான் கூறியதை அவர் புரிந்துக் கொள்ளவில்லை. சுற்றியிருந்தவர்கள் மெலிதாக சிரித்தார்கள். அவர் குழப்பத்துடன் பார்த்தார். நான் சொன்னேன் "மரண தண்டனையை நிறைவேற்றுபவர்"
"ஆம்.......அதுதான்." என்றவர் இப்படி சொல்லத் துவங்கினார். "திருடியவர்களின் கரங்களைத் துண்டிக்கும்படி அல் குர்ஆண் சொல்கிறது. கரங்கள் என்றால் என்ன என்ற வரையறையை யாராலும் சொல்ல முடியாது. கை என்ற அங்கத்தின் ஆரம்பம் எது? புஜத்தில் இருந்து துவங்குகிறதா? அல்லது வுளுவின் பாகங்களான முழங்கையில் இருந்து ஆரம்பிக்கிறதா? அல்லது மணிக்கட்டுவரையான பகுதியை கரங்கள் என்று அழைப்பதா? என்பதில் தீர்மானம் எடுக்க முடியாது. அஹ்லுல்பைத் இமாம்களின் கருத்தின் பிரகாரம் கையைத் துண்டித்தல் என்றால் கையின் விரல்களைத் தரிப்பதைக் குறிக்கும். ஆகவே, திருடர்களின் விரல்களைத் தரிக்கும் காரியத்தை இமாம் அலி ஸலாமுல்லாஹி நிறைவேற்றுவார்,"என்றார்.
நான் நிமிர்ந்து அமர்ந்தேன். பின்னர் தீர்க்கமாகக் கேட்டேன். 'இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி அப்படி செய்தார் என்று சொல்வதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா?"
"ஆதாரம் என்றால்?"
"அல் குர்ஆணிய ஆதாரங்கள்?........அஸ் ஸுன்னாவின் அல்லது ஷீஆ இமாம்களின் ஹதீஸ் அறிவிப்புக்கள்?"
அந்த ஷீ ஆ அறிஞர் ஒருகணம் பேச்சிழந்து நின்றார். பின்னர் "அல் குர்ஆணிய ஆதாரங்கள் இல்லை.......அப்படியான எந்த ஆதாரத்தையும் நான் கண்டதில்லை. ஆனால், அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்" என்றார்.
"சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாவது ஆயத்துக்கும் இமாம் அலி சம்பந்தமான இந்தக் கதைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்ன?"
"இமாம் ரிழா (அலை) அவர்களது ஹதீஸ் அறிவிப்பின் பிரகாரம் அந்தக் கொள்ளையர்களுக்கான தண்டனையை நிறைவேற்றியவர் இமாம் அலி ஸலாமுல்லாஹி அலைஹி. "
உடனே நான் இப்படி சொல்லத் துவங்கினேன். "குலபாயே ராஷிதீன்களின் காலத்தில் இமாம் அலி அரசியலில் இருந்து, இஸ்லாமிய சமூகத்தில் இருந்து முற்றாக ஒதுங்கியிருந்தார். மற்றது, ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் உடம்பைத் துன்புறுத்தும் எவிதத் தண்டனைகளையும் யாருக்கும் தீர்ப்பளிக்கவில்லை. கல்லெறிந்து மனிதர்களைக் கொலை செய்வதையும், கைகளைத் துண்டித்து மனித உறுப்புகளை உடலிலிருந்து அப்புறப்படுத்தும் செய்கையையும் அல் குர்ஆண் தண்டனைகளாக குறிப்பிடவில்லை. அதே போல ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) வழங்கிய தண்டனை என்ற கதையும் அப்பட்டமான புனைவு" என்றேன்.
அந்த ஷீஆ அறிஞர் மெளனமாக, சிந்தனையுடன் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இலங்கையின் அஸ் ஸுன்னா உலமாக்களைப் போல தான் சொன்ன கருத்தே சரி என்று பிடிவாதத்துடன் மல்லுக்கு வரவில்லை. "ப்ரதர்....... நீங்கள் இத்துணை உறுதியுடன் இதனை எப்படி சொல்கிறீர்கள்?"
நான் சூறா மாயிதாவின் ஆயத்துக்கான விளக்கத்தையும், திருடியவர்களின் கரங்களைத் தரித்தல் என்று அல் குர்ஆண் எதனைக் குறித்துப் பேசுகிறது என்பதையும் அவருக்கு விளக்கினேன். அத்துடன் ஒட்ட்கைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) வழங்கியதாகக் குறிப்பிடும் ஹதீஸ்களின் வலுவிழந்த பகுதிகளை விளக்கினேன். என்ன நடந்திருக்கும் என்ற கதையை புஹாரி ஹதீஸ் ஆதாரத்துடன் அவருக்குக் காட்டி விளக்கினேன். அவர் இடையிடையே சில கேள்விகளைக் கேட்டார். அல் குர்ஆணிய ஆயத்துக்களுடனும், புஹாரி ஹதீஸ் ஆதாரங்களுடனும் எனது பக்க நியாயத்தை இங்கும் அங்குமாக புள்ளிகளிட்டு அவற்றை இணைத்து மேலெழுந்தவாரியாக விளக்கினேன். பெருந்தன்மையான அந்த அறிஞர் நான் சொல்ல நினைக்கும் காரணங்களை சட்டென புரிந்துக் கொண்டார். மறுபேச்சின்றி அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.
௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦
இனி கப்ர் இடிந்து விழுந்த அஸாத் மௌலானாவின் வீடு............
"ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மறைவின் பின்னரான புதிய இஸ்லாமிய அரசு நபி குடும்பத்துக்கு உரித்தான சொத்துக்களை பறிமுதல் செய்கிறது. அன்னையவர்களின் ஆதரவுக்கு அவரது வீட்டில் குழுமிய பெண்களைத் தடுக்க அன்னையவர்களின் வீட்டுக்கு தீ வைக்கிறது. இமாம் அலியின் கைகளைக் கட்டி தெருவில் இழுத்து செல்கிறது. நபி குடும்பத்தினரின் ஆதரவாளர்களை மதம் மாறியோர் என்ற பெயரிலும், சகாத் வழங்க மறுத்தவர்கள் என்ற பெயரிலும் யுத்தத்தில் சந்திக்கிறது. நபி குடும்பத்தவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இப்படியாக அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அத்துடன் நிற்காமல், நபி குடும்பத்தின் ஆதரவாளர்களான அல் குர் ஆணை மணனம் செய்த ஹாபிழ்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான சஹாபா பெருந்தகைகளை யமாமா போர்க்களத்துக்கு அழைத்து சென்று படுகொலை செய்கிறது. முதலாவது கூட்டத்தினர் இக்ரிமாவின் தலைமையில் அழைத்து செல்லப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். இரண்டாவது குழுவினர் காலித் இப்னு வலீத் அவர்களின் தலைமையில் அழைத்து செல்லப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்."
"ஆதாரம்?"
"இமாம் தபரியின் வரலாற்று நூலான தாரிக் அத தபரியில் இந்த சம்பங்கள் விலாவாரியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன."
"இந்த சம்பவங்களுக்கும் சூறா மாயிதாவின் முப்பத்து மூன்றாம் ஆயத்துக்கும் எதாவது தொடர்புகள் இருக்கின்றனவா?"
"இருக்கின்றன. அதனை அறிந்துக் கொள்ள மனுக்குலத்தின் முதலாவது கொலையை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நடைபெற்ற இறைவனுக்கும் அவனது தூதுத்துவத்துக்கும் எதிரான கிளர்ச்சிகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து ஆரம்பிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்."
அஸாத் மௌலானா தொடர்புகளை விளக்கத் துவங்கினார்

Comments
Post a Comment