முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் நான்கு- (இமாம் மஹ்தி தொடர் 01)
நுழையும் முன்னர்:
அல் குர்ஆணின் போதனைகளுக்கும், போதனைகளின் விளக்கவுரையாக நாம் கருதும் ஹதீஸ் அறிவிப்புக்களுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாட்டை பேசுகின்ற பதிவது. ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை மிகக் கொடூரமான தலைவராகக் விபரிக்கும் பல கதைகள் ஹதீஸ்கள் என்று ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. அத்தகைய ஹதீஸ்களில் பிரபலமானது ஓட்டகைக் கொள்ளையர்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) தீர்ப்பளித்த தண்டனை. அந்த ஹதீஸில் நியாயம் காணும் இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றில் தவறிருப்பதாக நான் சொல்லத் துவங்கினேன். அதில் ஒரு செய்தியை இறுதியில் கூறியிருந்தேன்.
முடிவுரைக் குறிப்பைக் கண்டவுடன் இலங்கையில் இருக்கும் ஒரு ஷீஆ முஸ்லிம் எனக்கு அழைப்பெடுத்தார். "பயாஸ்........எங்களிடம் நீங்கள் குறிப்பிட்ட அல்லாமா தப தபாயி அவர்களின் தப்ஸீர் இருக்கிறது. அதனைப்பார்த்துவிட்டு உங்களது கருத்து சரியா? இல்லையா? என்று கூறுகிறேன்." என்றார்.
கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
"நல்ல செய்தி. அப்படியே செய்யுங்கள். என்னில் தவறிருந்தால் அதனைத் திருத்திக் கொள்கிறேன்." என்று உற்சாகத்துடன் அவருக்கு பதில் சொன்னேன்.
அதன் பின்னர் தினமும் ஆவலுடன் காத்திருந்தேன். பதிலில்லை.
ஒருவாரம் கழிந்ததன் பின்னர் நான் அவருக்கு அழைப்பெடுத்தேன். பதில் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் "அல் குர்ஆண் சம்பந்தமாக பதில் சொல்லும் அறிவு எனக்கில்லை. அதனை நான் எங்களது ஷீஆ உலமா ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் 'அல்லாமா தப தபாயி அந்த ஆயத்துக்கு பல பதில்களை வெவ்வேறு சான்றுகளை முன்வைத்து எழுதி இருப்பார். பயாஸ் அவற்றைக் கவனித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். சிலவேளை அல்லாமா தப தபாயி அந்தக் குர் ஆண் ஆயத்துக்கு வேறு காரணத்தையும் கூறியிருப்பார். நான் பயாஸின் எழுத்துக்களைக் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். இப்போதைக்கு ஆளை கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறேன்." என்றாராம்.
"அப்படியா?" என்ற நான். "அந்த ஆயத்துக்கு அந்த ஷீஆ அறிஞர் என்ன விளக்கத்தைக் கூறினார்?" என்று கேட்டேன்.
"ஒன்றுமே சொல்லவில்லை. அதற்கு அவருக்கு நேரம் போதவில்லையென்று நினைக்கிறேன். எங்களால் ஆக்களை வற்புறுத்த முடியாதே?"
அவரது இந்தப் பதிலில் ஒரு விடயத்தை நான் புரிந்துக் கொண்டேன். சரி என்று எதனை மக்கள் நினைத்து விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த நம்பிக்கை காயப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்களின் தவறான நம்பிக்கை இஸ்லாத்தைக் காயப்படுத்தினாலும் அதில் அவர்களுக்கு ஆட்சேபனையில்லை.
ஈரான் கும் நகர மத்ரஸாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் ஒரு இலங்கை மாணவனை எனக்குத் தெரியும். உடனே அவருக்கு அழைப்பெடுத்தேன். அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். "கொஞ்சம் இருங்கள் பயாஸ் நானா.....இப்பவே பார்த்து சொல்கிறேன்" என்றார்.
"எப்படி?" என்றேன்.
"உங்களுடன் உரையாடும்பொழுதே போனில் பார்க்க முடியும்" என்றார்.
பின்னர் அவர் விலாவாரியாக அல்லாமா தப தபாயி அவரது தப்சீரில் எழுதியிருந்த விளக்கவுரையை சொல்லத் துவங்கினார். அத்தனையும் இமாம் இப்னு கதீர் கூறியிருந்த செய்திகள். ஆனாலும், அதில் சின்னதாக ஒரு வித்தியாசத்தை அவதானித்தேன். கும் மதரஸா மாணவன் விபரித்ததில் பயங்கரமான அல்லது மோசடியான புனைவொன்று இழைந்திருந்தது.
அல்லாமா தப தபாயி அந்த விளக்க ஹதீஸ் அறிவிப்பை அஹ்லுல்பைத் இமாம் ஒருவரின் அறிவிப்பாக பதிந்திருந்தார். ஓட்டகைக் கொள்ளையர்களைப் பிடித்து வந்து மாறு கால் மாறு கைகளைத் துண்டித்து, கண்களை வெளியில் தோண்டி எடுத்து, அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியவர் இமாம் அலி ஸலாமுன்அலைஹி என்று எனக்கு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த மாணவர் சொன்னார்.
"இமாம் அலியா?" என்று அதிர்ச்சியுடன் கேட்ட என்னிடம் "ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சொன்னால் இமாம் அலி மறுபேச்சின்றி அதனை செய்து முடித்துவிடும் இயல்பு உள்ளவர். "என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ் அப் மூலம் அந்த மாணவர் அவர் வாசித்த இணைய பதிவுகளை அனுப்பி வைத்தார். அவற்றை நான் இலங்கை ஷீஆ முஸ்லிம் அபிமானிகளுக்கும், அந்த ஷீஆ அறிஞருக்கும் மொழிபெயர்த்துத் தருமாறு அனுப்பி வைத்தேன்.
இன்னமும் பதிலில்லை.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் எனக்கென்று ஒரு கோப்பை திறந்து வைத்திருப்பதாகவும், என்னுடைய எழுத்துக்களையும் நகர்வையும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் சில வருடங்களுக்கு முன்னர் கொத்தட்டுவ ஜும்மாஹ் பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் கூறியிருந்த செய்தியையும் இங்கு பதிவது பொருத்தமென்று நினைக்கிறேன்.
இதனை சொல்லக் காரணம்?
என்னுடைய கருத்துக்கள் அஸ் ஸுன்னா அல்லது ஷீஆ இஸ்லாமிய பின்புலத்தில் சொல்லப்படவில்லை என்பதை சொல்லிக் கொள்ளவே இவற்றை விபரித்தேன்.
௦௦௦ ௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦௦
இனி, அஸாத் மௌலானாவின் வீடு.
"அல்லாஹ்வின் அருளால் நீங்கள் கேட்ட ஆயத்துக்கான தப்ஸீர் விளக்கத்தை அல் குர்ஆணே தன்னுள் கொண்டிருக்கிறது. அதனை அந்த ஆயத்தின் முன்னைய, பின்னைய ஆயத்துக்கள் தெளிவுபடுத்தி விடுகின்றன."
கேட்ட எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பதில் தெரியாமல் ஓடி ஒளிகின்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு அல் குர்ஆண் அப்படி என்ன விளக்கவுரையை சொல்லப்போகிறது?
"பயாஸ்........ ஒரு விடயத்தை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். புனித அல் குர்ஆணின் அத்தனை ஆயத்துக்களுக்கும் சரியான அர்த்தம் தெரிந்த அறிஞர்கள் யாருமே இந்த உலகத்தில் இருந்ததில்லை. இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனினும், ரஸூலுல்லாஹ் (ஸல்) தனது ஜீவித காலத்தில் தனக்கு அருளப்பட்ட அல் குர்ஆணின் அத்தனை ஆயத்துக்களுக்கும் என்ன விளக்கம் என்றும் என்றும் அது அருளப்பட்டக் காரணத்தையும் பூரணமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அத்தனை ஆயத்துக்களுக்கும் செயல்முறையில் என்ன அர்த்தமென்று வாழ்ந்துக் காட்டியதில்லை. ஏனெனில், அல் குர்ஆணின் சில ஆயத்துக்கள் இறந்த காலத்தில் நடந்து முடிந்த சில கதைகளை சொல்கின்றன. சில, எதிர்காலத்தில் நடைபெறப்போகின்ற முன்னறிவிப்புக்களை எதிர்வு கூறுகின்றன. அதனால், அத்தகைய ஆயத்துக்களுக்கு நடைமுறையில் வாழ்ந்துக் காட்டி அவற்றை விபரிக்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கவும் இல்லை. அது அவசியமும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரசூலுல்லாஹ்வின் மறைவின் பின்னர் இஸ்லாத்தின் எதிரிகளினால் புனித அல் குர்ஆணின் விளக்கவுரையாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இன்றைய குழப்பநிலைக்கு அதுவே காரணம். அநேகமாக எல்லா ஹதீஸ்களும் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டன. ஹதீஸ்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்ட நிலையில், அரசுக்கு ஆதரவான கருத்துக்கள் ஹதீஸ் என்ற பெயரில் அல் குர்ஆணிய ஆயத்துக்களுக்குரிய விளக்கங்களாக மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டன. இப்படியாக அல் குர்ஆணுக்குரிய சரியான போதனைகள் திரிபுபடுத்தப்பட்டு மக்களை வழிகெடுக்கத் துவங்கின."
"மக்களை வழி கெடுத்ததா?" என்ற நான் நிஜமாகவே இப்படி சொன்னேன்."புரியவில்லை மௌலானா?"
"எப்படியென்று விளக்குகிறேன். அல் குர்ஆணின் இந்த ஆயத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். "பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் பாகமுண்டு - அதிலிருந்துள்ள சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட பாகமாகும்.4:7. "
"இந்த ஆயத்துக்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன தொடர்பு மௌலானா?" உண்மையில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
"இந்த ஆயத் சொல்லும் செய்தி என்ன?"
"பெற்றோரோ, உறவினரோ விட்டு செல்கின்ற சொத்தில் குழந்தைகளுக்கு பங்கிருக்கிறது என்று இந்த ஆயத் சொல்கிறது."
"நல்லது" என்ற மௌலானா கொஞ்சம் ஆழமான குரலில் "ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களது மறைவுடன் மதீனாவில் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அனைத்தும் முக்கியமானவை. அதில் பிரதானமானது அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹாவின் பதக் பண்ணை நிலத்தை முதலாம் கலீபா அரசுக்கு சுவீகரித்துக் கொண்ட நிகழ்வு. அதனை "நபிமார்களுக்கு வாரிசுகள் இல்லை. அவர்களது சொத்துக்கள் முஸ்லிம்களிடையே தர்மமாக பிரித்துக் கொடுக்கப்படல் வேண்டும் என்று ரஸூலுல்லாஹ் தன்னிடம் சொன்னதாக ஹசரத் அபூபக்கர் (ரலி) ஒரு ஹதீஸை அறிவித்தார்.
"அந்த ஹதீஸை அல்லது அது போன்றதொரு ஹதீஸை வேறு யாருமே அறிவிக்கவில்லை. அந்த ஹதீஸ் அறிவிப்பின் பிரகாரம் ஸரிஆ சட்டமியற்றிய புதிய இஸ்லாமிய அரசு அந்த நிலத்தை அஹ்ளுல்பைத்தினரிடமிருந்து அபகரித்துக் கொண்டார்கள்.
"இந்த செய்கையானது நான் மேலே குறிப்பிட்ட அல் குர்ஆணின் போதனைக்கு நேர் முரணாகும். இல்லையா?"
இதனை வாசித்து குழம்பிய உங்களைப் போலவே நானும் குழம்பிப்போனேன்.
"பிரச்சினை இத்துடன் முடியாவில்லை." என்ற மௌலானா தொடர்ந்தார். "முதலாம் கலீபாவின் அல் குர்ஆணிய போதனைக்கு முரணான இந்த செயலை அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா முதலாம் கலீபாவின் அவையிலேயே சுட்டிக் காட்டினார்கள். ஆனால், முதலாம் கலீபா அன்னையவர்களிடம் தன்னிடம் ரஸூலுல்லாஹ் கூறிய ஹதீஸை அறிவித்திருக்கிறார். அன்னையவர்கள் அவரது கூற்றுக்கு சாட்சியத்தை சமர்பிக்கக் கூறினார். அதற்கு அபூபக்கர் (ரலி) அந்த ஹதீஸை ரஸூலுல்லாஹ் தனக்கு மட்டுமே கூறியதாக சொல்லியிருக்கிறார்.
"உடனே அன்னையவர்கள் அல் குர்ஆணின் இந்த ஆயத்தை எடுத்துச் சொல்லி முதலாம் கலீபாவின் கூற்று அல் குர்ஆணின் போதனையுடன் முரண்படுவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். பின்னர் இந்த ஆயத்தின் பிரகாரம் பெற்றோரின் சொத்தில் தனக்கிருக்கும் உரிமையை நிரூபித்திருக்கிறார்.
"ஆனால், ஹசரத் அபூபக்கர் (ரலி) இந்த ஆயத் சாதாரண பொதுமக்களுக்கு உரியது என்றும் நபிமார்களுக்கு வாரிசுகள் இல்லை"யென்றும் மீண்டும் கூறியிருக்கிறார்.
அதனைக் கேட்ட அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா அவர்கள் நபிமார்களுக்கு வாரிசுகள் உண்டு என்று சான்று சொல்லும் சூறா மர்யமின் அல் குர்ஆணின் ஆயத்துக்களை அந்த சபையில் சமர்பித்திருக்கிறார்கள்.
"ஹசரத் சக்கரியா (அலை) அவர்கள் அன்னை மரியம் ஸலாமுன் அலைஹாவின் மிஹ்ராப் அருகில் நின்று கேட்ட பிரார்த்தனையை விளக்கும் அந்த ஆயத்தில் நபிமார்களுக்கும் வாரிசு உண்டு என்று தெரிகிறது.
“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”19:5 - 6
"இந்த ஆயத்துக்கள் மூலமாக நபிமார்களுக்கு வாரிசுகளும், வாரிசுரிமையும் இருக்கிறது என்று அல் குர்ஆண் கூறுகிறது. இல்லையா? "
நான் "ஆம்," என்றேன்.
"ஆனாலும், நபிமார்களுக்கு வாரிசுரிமை இல்லையென்று கூறி ரஸூலுல்லாஹ் (ஸல்) அவரது மகளுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த பதக் பண்ணையை முதலாம் கலீபா அரசுக்கு சுவீகரித்துக் கொண்டார். அந்தப் பண்ணையை ஹிஜ்ரி ஆறு அல்லது ஏழாம் வருடம் ரஸூலுல்லாஹ் (ஸல்) தனது மகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மறைவின் பின்னர் அவரது சஹாபாக்கள் இந்தக் குர்ஆண் ஆயத்துக்குகளுக்கு முரணாகவே அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹாவின் சொந்த நிலத்தை சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். "
நான் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
அஸாத் மௌலானாவின் விழியோரங்களில் நீர் நிறைந்தது. பின்னர் இப்படி சொன்னார். "ரஸூலுல்லாஹ்வின் மறைவின் பின்னர் அவர்களது கண்ணியமிக்க குடும்பத்தினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அவரது மகளாரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அனைவரும் மதம் மாறியவர்கள் என்றும், சக்காத் கொடுக்க மறுத்தவர்கள் என்றும் படு கொலை செய்யப்பட்டார்கள். அத்துடன் நிற்காமல் பொய் நபிமார்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் யமாமா போர்க் களத்தில் அல் குர்ஆணை மணனம் செய்திருந்த சுமார் ஆயிரத்து நானூறு ஹாபில் ஸஹாபாக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்."
தூரத்தில் கோடை இடியொன்று இடித்தது. வெளியில் மழைக்கு மலைக்கு இருட்டியது. இங்கும் சூழலில் இருட்டு அப்பியது. கனதி பரவியது.
சட்டென அஸாத் மௌலானாவின் முகத்தில் கேலிப்புன்னகை அரும்பியது. "முதலாம் கலீபா நபிமார்களுக்கு வாரிசுரிமை இல்லையென்று இஸ்லாமிய சட்டமியற்றி அரசுக்கு சுவீகரித்த பதக் பண்ணையை இரண்டாம் கலீபா பதவிக்கு வந்ததும் அந்தப் பண்ணையை மீண்டும் நபி குடும்பத்தினருக்கு வழங்குகிறார். இதிலிருந்தே முதலாம் கலீபா அல்
குர் ஆணுக்கும் அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய ஸரிஆ சட்டத்துக்கும் முரணாகவே நடந்திருக்கிறார் என்பது புரிகிறது. இல்லையா?"
நான் அமைதியாக இருந்தேன்.
"முதலாம் கலீபா செய்தது சரியென்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்." என்ற மௌலானா இப்படித் தொடர்ந்தார். " அது சரியென்றால் இரண்டாம் கலீபா அந்த நிலத்தை மீண்டும் நபிக் குடும்பத்துக்கு வழங்கிய செயல் இஸ்லாமிய ஸரிஆ சட்டத்துக்கு முரணாகும். இல்லையா?........முதலாம் கலீபா செய்தது சரி என்றால் இரண்டாம் கலீபா செய்தது பிழை. இரண்டாம் கலீபா செய்தது சரி என்றால் முதலாம் கலீபா செய்தது பிழை?. இதில் யார் செய்தது சரி?"
"யோசிக்க வேண்டிய செய்திதான்" என்றேன்.
"கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்........... அல் குர்ஆணின் போதனைக்கு முரணாக முதலாம் கலீபா செயல்படுகிறார். ஒரு வாதத்துக்கு அது சரி என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், முதலாம் கலீபா சரியென்று நினைத்த அந்த செயலில் இரண்டாம் கலீபா தவறு காண்கிறார். அதனால்தான் அவர் அந்த பண்ணை நிலத்தை மீண்டும் அஹ்ளுல்பைத்தினரிடம் கையளித்திருக்கிறார். அவர் செய்த செயலில் நியாயம் காணாத மூன்றாவது கலீபாவின் மருமகன் அந்நிலத்தை அவருடைய நிலமாக அபகரித்துக் கொள்கிறார்......... ரஸூலுல்லாஹ் வின் மறைவின் பின்னர் அல் குர்ஆணின் போதனைக்கு முரணாக நடந்துக்கொண்ட இந்த தலைவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"வெளியே சொல்ல முடியாத ஏதோவொன்று நடந்திருக்கும்" என்றேன்.
"இன்னுமொரு விடயத்தைக் கவனியுங்கள். நபிமார்கள் விட்டுச் செல்லும் சொத்து தர்மம் என்ற ஹதீஸ் உண்மையாக இருந்தால் அந்த சொத்து தர்மமாக முஸ்லிம் சமூகத்துக்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லையா?ஆனால், தர்மமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டிய நிலம் பாதுகாப்புடன் அரசிடம் இருந்திருக்கிறது."
நான் மௌலானாவின் கவனத்தை திசை திருப்ப இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். "அல்
குர்ஆணின் அத்தியாயம் 5 ஆயத் 3 3 க்கான விளக்கத்தை சொல்கிறீர்கள். அதற்கும் இந்த கதைகளுக்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் இருக்கின்றதா மௌலானா?"
"ஏனில்லை.......அதனை விளங்க வைக்கவே இதனை சொல்கிறேன்." என்றார் மௌலானா.
கேட்க குழப்பமாக இருந்தது.
அஸாத் மௌலானா தொடர்ந்தார். "முதலாவது கலீபாவின் இஸ்லாமிய அரசு அத்துடன் நிற்காமல் மதம் மாறியவர்களுக்கு எதிராகவும், சக்காத் வழங்க மறுத்தவர்களுக்கு எதிராகவும் பொய் நபிமார்களுக்கு எதிராகவும் யுத்தப் பிரகடனம் செய்தது. அல்லாஹ்வோ, ரஸூலுல்லாஹ்வோ அப்படி செய்யச் சொல்லி சொல்லவுமில்லை. அப்படி செய்ததுமில்லை."
"இதனை எப்படி இத்துனை உறுதியாக சொல்கிறீர்கள் மௌலானா?"
மௌலானா சத்தமாக சிரித்தார். "சரி.....முதலாம் கலீபாவின் இந்த செயலில் நியாயம் காணும் அறிஞர்களிடம் முதலாவது கலீபாவின் இந்த செய்கைகளுக்கு அல் குர்ஆணில் இருந்தும், ரஸூலுல்லாஹ்வின் நடைமுறை வாழ்வில் இருந்தும் சான்றுகளைத் தரச் சொல்லுங்கள் பார்க்கலாம்?"
ஒரு நிமிடம்?
கொஞ்சம் நிதானமாக நின்று அஸ் ஸுன்னா அறிஞர்களுக்கு பதில் சொல்ல அவகாசம் கொடுக்கவேண்டிய தருணம் இதுவென்று நினைக்கிறேன். ஏனெனில், எனக்கும் அஸ் ஸுன்னாவின் ஒளியில் இதனை அறிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறது.
ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மறைவுடன் உருவான இஸ்லாமிய அரசும் அதன் ஸ்தாபகர்களும் அல் குர்ஆணின் போதனைக்கு முரணாக இஸ்லாமிய ஸரிஆ சட்டமியற்றி ஆட்சி செய்திருக்கிறார்களா?
அனைவரும் தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மை இது. இல்லையா?
இந்தக் கேள்விக்கு அஸ் ஸுன்னாவின் ஒளியில் யாராவது பதில் தருவார்களா?
கொஞ்சம் பொறுத்திருப்போம். இன்ஷா அல்லாஹ்.

Comments
Post a Comment