முள் காட்டில் பூக்களும் உண்டு!- அத்தியாயம் ஏழு- (இமாம் மஹ்தி தொடர்- 01)
இன்று பாதுகாப்புப் பெறவேண்டிய சக்கூம் நச்சுக் கனிகள்.......
முதலாம் கலீபாவின் இரண்டு வருடமும் மூன்று மாதங்களும் மட்டுமே நீடித்த மிகக் குறுகிய இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்றில் ஜீரணிக்க முடியாத பல கசப்பான நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் ஸகாத் கொடுக்க மறுத்தவர்களுடனான யுத்தம். இஸ்லாத்தை விட்டும் வேறு மதங்களுக்கு மாறிய முர்தத்துக்களுடனான யுத்தம். பொய் நபிமார்களுடனான யுத்தம் என்பன முக்கியமான பிரச்சினைகளாக எமக்கு சொல்லித் தரப் பட்டன.
உங்களுக்குத் தெரியுமா?, முதலாம் கலீபா சந்தித்த இதே பிரச்சினைகளை ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் சந்தித்திருக்கிறார்கள். இத்தகைய பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தையும் செயல்முறையில் காட்டித்தந்திருக்கிறார்கள் என்கிற உண்மை மிகவும் சூசகமாக எங்கள் கவனத்தை விட்டும் மறைக்கப் பட்டன.
அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் போதனைக்கு அல்லது ஸுன்னாவுக்கு முரணாகவே முதலாம் கலீபா நடந்துக் கொண்டார் என்கிற விடயம் வெளியே தெரிந்து போகும் அபாயம் இந்த விடயங்களை பகிரங்கமாக தெரியப் படுத்துவதில் தொக்கியிருந்தது.
அந்த முரண்பாடுகளை இன்னொருமுறை விரிவாகக் கவனிப்போம்.
எமது இன்றைய ஆய்வில் யமாமா கொலைக் களத்தில் முஸைலமா என்ற பொய் நபியுடன் நடந்த யுத்தத்தில் நடந்த சில சந்தேகமான விடயங்களை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இன்ஷா அல்லாஹ்.
மிகக் குறுகிய காலத்தில் அல்லது சில மாதங்களில் தோற்றம் பெற்ற முசைலமாவின் ஆதரவாளர்கள் ஆச்சரியமாக பல லட்சங்களைக் கடந்து பெருகி இருக்கிறார்கள். இஸ்லாமிய தளபதி காலித் இப்னு வலீதை எதிர்கொண்ட அவனது படையினரின் தொகை சுமார் நாற்பதாயிரம்.
சட்டென்று தோற்றம் பெற்ற பொய் நபி முஸைலமாவை எதிர் கொண்ட முஸ்லிம் படையணியினரில் அல் குர்ஆணை மணனம் செய்த ஆயிரத்து நானூறுக்கும், சில அறிவிப்புக்களின் பிரகாரம் ஏழு நூறுக்கும் அதிகமான ஹாபிஸ்கள் பலவந்தமாக பங்கேற்க நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.
முதலாம் கலீபாவும், அப்போதைய புதிய இஸ்லாமிய ஆட்சியின் நிர்வாகிகளும் புனித அல் குர்ஆணை மணனம் செய்திருந்த இந்த ஹாபிஸ்களைப் பாதுகாக்கவேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்களை முசைலமாவை எதிர் கொள்ள அனுப்பிய செய்கையில் சில சமயம் அவர்களே அறிந்திருக்காத பெரிய மர்மம் ஒளிந்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த விடயத்தை அவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை என்பதை என்னுடைய மனம் ஏற்க மறுக்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
முதன் முதலில் முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட இஸ்லாமிய படையணியினரின் தளபதியாக இக்ரிமா இப்னு அபூ ஜஹால் நியமிக்கப் படுகிறார்.
இந்த தளபதி நியமனமே சந்தேகத்துக்குரியது. ஏனெனில், இக்ரிமாவின் தந்தை அபூ ஜஹால் இஸ்லாத்தின் பரம எதிரி. சுமார் பத்து வருடத்துக்கு முன்னர் நடைபெற்ற பதர் யுத்த களத்தில் வைத்து இக்ரிமாவின் கண்ணெதிரிலேயே அவரது தந்தை கொலை செய்யப் படுகிறார்.
மக்கா வெற்றியின் பின்னர் கஹ்பதுல்லாஹ்வில் தஞ்சம் புகுந்தாலும் கொலை செய்யப் படவேண்டும் என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) மரண தண்டனை விதித்தவர்களில் இந்த இக்ரிமாவும் ஒருவர். இது தவிர, எதிரிகளின் இரத்த நாளங்களை சில்லிட வைத்து பழிவாங்கும் பாதாள உலகின் செய்கைகளை அல்லது மாபியாவின் பழி வாங்கும் கொடூரங்களை நாம் அறிவதற்கு முன்னரேயே அன்றைய அறாபியாவில் அது அறபுகளின் இரத்தத்துடன் ஒன்றிய வாழ்வியல் கலாச்சாரமாக இருந்திருக்கிறது.
இத்தகைய கலாச்சாரத்தின் ஆளுமையின் காரணமாகவே ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களையும் அவரகளது மார்க்கத்தையும் மக்காவை வெற்றி கொள்ளும் வரை பனு உமையாக்களும், அவர்களது குறைஷி ஆதரவாளர்களும் இஸ்லாத்தைப் பூண்டோடு அழித்தொழிக்க பகீரதப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருந்த கதைகளை வரலாறு மறக்காமல் இன்றும் சொல்கிறது..
இந்த நிலையில், மக்கா வெற்றிக்குப் பின்னர் மரண தண்டனையில் இருந்து தப்புவதற்காக இஸ்லாத்துக்கு வந்த இக்ரிமாவின் உள்ளம் எந்தளவு இஸ்லாத்தின்பால் இசைந்திருக்கும் என்பதை யாராலுமே சொல்ல முடியாது.
இருந்தாலும், முதலாம் கலீபாவின் அவசரமான நியமனத்தின் பின்னர் அவசர அவசரமாக படு பயங்கரமான முசைலமாவை எதிர் கொள்ள சென்ற போர் வீரர்களுக்கு இந்த இக்ரிமா படைத் தளபதியாக நியமிக்கப்படுகிறார்.
இவரின் தலைமையில் அப்பாவி முஸ்லிம் வீரர்கள் பலியிட அழைத்து செல்லப் படும் பலிக் கடாக்கள் போல கொலைக் களத்துக்கு பலிக் கடாக்களாக அழைத்து செல்லப் படுகிறார்கள்.
சொல்லி வைத்தமாதிரி முசைலமாவை எதிர் கொண்ட இந்தப் படையணி படு தோல்வியை சந்திக்கிறது. அழைத்து செல்லப் பட்ட முக்கியமான முஸ்லிம் வீரர்கள் அனைவரும் கொலை செய்யப் படுகிறார்கள். இக்ரிமாவுடன் இருந்த சில வீரர்கள் மாத்திரம் தப்பி விடுகிறார்கள். பலிக் கடாக்களை அழைத்துச் சென்ற தளபதி இக்ரிமா போர்க் களத்தில் காணாமல் போய் விடுகிறார்.
முதலாம் கலீபாவின் கட்டளையை இக்ரிமா மீறியதனாலேயே முஸ்லிம் வீரர்கள் படு கொலை செய்யப் பட்டதாகவும், இந்தத் தோல்வியினால் ஏற்பட்ட
வெட்கத்தின் காரணமாக அவர் சில காலம் ஒளிந்திருந்து பின்னாளில் முதலாம் கலீபாவைக் காண வந்ததாக இஸ்லாமிய வரலாறு பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது.
முசைலமாவின் படையினரின் கைகளினால் பரிதாபமாக தோற்றுப்போய் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட முஸ்லிம் வீரர்களின் பரிதாபமான இழப்புக்கு சொல்லப் படுகின்ற இந்தக் கதையை நம்ப முடியாதுள்ளது.
விடை இல்லாத இந்தக் கேள்வி இன்றுவரை எஞ்சி நிற்கிறது.
படையின் தளபதி இக்ரிமா எவ்வாறு காணாமல் போவார்?
இக்ரிமாவின் படையினரின் தோல்வியின் பின்னர், சுரஹ்பில் பின் ஹஸ்னா வின் தலைமையில் இன்னுமொரு படையணி முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பி வைக்கப் படுகிறது. சுரஹ்பில் பின் ஹஸ்னாவும் பலிக் கடாக்களாக தயார் செய்யப் பட்ட முஸ்லிம் வீரர்களை அழைத்துச் செல்கிறார்.
ஆச்சரியம்.சொல்லி வைத்தமாதிரி இக்ரிமாவைப் போல இதிலும் தளபதி தனது சில வீரர்களுடன் தப்பி விடுகிறார்.ஏனைய முஸ்லிம் வீரர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.இதன் பின்னர்தான் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) காலித் இப்னு வலீதின் தலைமையில் மூன்றாவது படையினரைத் தயார் செய்து முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பி வைக்கிறார்.
இம்முறை முசைலமாவினால் வித்தியாசமான் ஒரு வியூகம் அமைக்கப் படுகிறது.
அவன் தனது நாற்பதாயிரம் படையினரை அக்ரபா என்ற இடத்தில் தயாராக நிறுத்துகிறான். காலித் இப்னு வலீதின் தலைமையில் வந்த படையினர் எதுவித தயார் நிலையும் இன்றி அக்ரபாவை அடைகிறார்கள். உஹத் யுத்தக்களத்தில் நடைபெற்ற சதி போலவே இங்கு ஒரு சதி அழகாக திட்டமிடப்பட்டு நடந்து முடிகிறது.
அக்ரபாவில் வைத்து இரண்டு படையினரும் எதிரெதிரே சந்தித்துக் கொள்கிறார்கள். முசைலமாவின் படையினரில் இருந்து நஹார் என்பவன் முன் வந்து தன்னை எதிர்க்கும் துணிவு முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்று சவால் விடுகிறான். அவனது சவாலை ஸைத் இப்னு கத்தாப் (ரலி) ஏற்கிறார்.
சாதாரணமாக இஸ்லாமிய யுத்தங்கள் அனைத்திலும், எதிரிகள் இவ்வாறு சவால் விட்டால் முஸ்லிம் படையின் தளபதி ஒரு வீரரை தெரிவு செய்து முன்னால் அனுப்புவார். அல்லது அவர் அந்த சவாலை எதிர் கொள்வார்.ஆனால், அல்லாஹ்வின் வாள் என்று புகழாரம் சூடப்பட்ட தளபதி காலித் இப்னு வலீத் அப்படி செய்ததாக செய்தி இல்லை.
அதிசயமாக யுத்தக்களத்தில் அவரைக் காணவில்லை.
உமர் (ரலி) அவர்களின் தம்பி ஸைத் (ரலி) தானாக நஹாரை எதிர்வு கொள்கிறார்.
தனி நபர் சண்டையில் ஸைத் (ரலி) எதிரி நஹாரைக் கொலை செய்துவிட சண்டை துவங்குகிறது.மிகக் கடுமையான சண்டை. முஸ்லிம்கள் சுற்றி வளைக்கப் பட்டு இலாவமாக கொல்லப் படுகிறார்கள்.
தயார் நிலையில் இருந்த முசைலமாவின் படையினரை எதிர்க்க முடியாமல் எது வித தயார் நிலையிலும் இல்லாத முஸ்லிம்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
பின்வாங்கும் முஸ்லிம்களை முசைலமாவின் படையினர் துரத்தி துரத்தி கொலை செய்கிறார்கள்.
முசைலமாவின் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத முஸ்லிம்கள் சிதறி ஓடத் துவங்குகிறார்கள். எங்கும் இரத்தமயம்.
காணும் இடம் தோறும் அஹ்ளுல்பைத்தினரின் ஆதரவாள ஸஹாபாக்களின் சடலங்கள்.
அல்லாஹ்வின் வாள் என்ற சிறப்புப் பெயருக்கு சொந்தமான தளபதி காலித் இப்னு வலீதைக் காணவில்லை. எங்கு போனார், என்ன செய்தார் என்ற தடயங்களும் இல்லை. திடீரென முசைலமாவின் படையினர் காலித் இப்னு வலீதின் கூடாரத்தை சுற்றி வளைக்கிறார்கள்.
சில வீரர்கள் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டு சொட்டு சொட்டென்று சொட்டுகிற வாட்களுடன் உள்ளே நுழைந்தார்கள்.உள்ளே தளபதி காலித் இப்னு வலீத் இல்லை.
ஆனால், அவரது மனைவி உம்மு தமீம் மட்டும் இருந்திருக்கிறார்.உம்மு தமீமுக்கு காவலாக அவரது கூடாரத்தில் முசைலமாவின் போர் வீரரான முஜாஆ இருந்திருக்கிறார்.
முசைலமாவின் போர் வீரர் முஜாஆ எப்படி இந்தக் கூடாரத்துக்கு வந்தார்?
முஸ்லிம் படை வீரர்களின் பாதுகாப்பில் உம்மு தமீம் ஏன் இருக்கவில்லை?
அதிர்ச்சியான இந்தக் கேள்விகளுக்கு ஆச்சரியமான கதையொன்று பதிலாக இஸ்லாமிய வரலாற்றில் சொல்லப் படுகிறது. சிறு பிள்ளைத்தனமான அந்தக் கதை இப்படி ஒலிக்கிறது.
முஜாஆ என்பவர் காலித் இப்னு வலீதினால் சிறை பிடிக்கப் பட்ட முசைலமாவின் போர்க் கைதியாம். காலித் இப்னு வலீத் அவரது கூடாரத்தை விட்டும் வெளியே செல்லும் பொழுது முஜாஆவை அங்கே காவலுக்கு வைத்து விட்டுப் போனாராம்.
காலித் இப்னு வலீதின் நன் நடத்தையின் காரணமாகவும், அவர் தன்னை நல்ல விதமாக நடத்தியதன் காரணமாகவும் முஜாஆ மிகவும் சாதுர்யமாக முசைலமாவின் படையினரிடம் இருந்து காலித் இப்னு வலீதின் மனைவியைக் காப்பாற்றினாராம்.
முஸ்லிம்களின் தளபதிக்கு அவரது வீரர்களை விடவும் எதிரி வீரன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான். அதுவும் தனது மனைவியையும், அவர் இருக்கும் கூடாரத்தையும் பாதுகாக்கும் விடயத்தில் அவரது படையினரை விட அவரது எதிரியின் கைதி நம்பிக்கைக்கு உரியவன்.....
கூடாரத்தினுள் முசைலமாவின் போர் வீரர்கள் நுழைந்ததன் பின்னர் முஜா ஆவுடன் அவர்கள் ஏதோ கதைத்து இருக்கிறார்கள். முஜாஆ அந்தப் போர் வீரர்களிடம் இப்படி சொன்னாராம்...?
"சுதந்திரமான இந்தப் பெண்ணை கொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை..."
அவரின் பேச்சைக் கேட்டு உரோசப் பட்ட அந்த வீரர்கள் அதன் பின்னர் காலித் இப்னு வலீதின் மனைவியையும் அவரால் கைது செய்யப் பட்ட கைதியையும் அப்படியே 'அம்போ'வென்று விட்டு விட்டு வெளியே வந்து காலித் இப்னு வலீதின் கூடாரத்தை பிணைத்திருந்த கயிற்றை மட்டும் வெட்டி வீசி எறிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விட்டு போய் விட்டார்களாம்.
ஆச்சரியமாக இல்லை? ஸஹாபாக்களை கொன்றொழித்த பயங்கரமான யுத்தமொன்றினது அதிசயமான இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்.
முழு முஸ்லிம் உம்மாவினதும் காதில் பூ சுற்றும் இந்தக் கதையை நாம் நம்புவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். நாம் நம்பிக்கொண்டுமிருக்கிறோம்.
ஒரு புறம் முஸ்லிம் ஹாபிஸ்கள் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப் படுகிறார்கள். மறு புறம் எதிரி தளபதியின் மனைவியை சிறை பிடிக்கும் அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாக அவரது கூடாரத்தின் கயிற்றை மாத்திரம் வெட்டி வீசி விட்டு முசைலமாவின் போர் வீரர்கள் போகிறார்கள்.
போகும் வழியில் முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்தவர்களாகவே போகிறார்கள்.
முஸ்லிம்களின் தளபதி சைபுல்லாஹ்வைக் காணவில்லை?
தப்பிப் பிழைத்த முஸ்லிம் படை வீரர்கள் இந்தக் காட்சியைக் காண்கிறார்கள்.
என்ன நடந்தது என்று அவர்கள் ஊகித்து இருப்பார்கள் போலும்.நடந்த நாடகங்களின் அந்தரங்கங்கள் அவர்களுக்குப் புரிந்துப் போயிருக்க வேண்டும்.
அங்கும் இங்கும் என்று சிதறிக் கிடந்த முஸ்லிம் வீரர்களை தாபித் இப்னு கைஸ் (ரலி) கூவி அழைத்து ஒன்று திரட்டுகிறார்.
சிதறி ஓடும் முஸ்லிம் படையினரை ஒன்று திரட்டும் சமயம் அவரது அழைப்பை அலட்சியம் செய்து முஸ்லிம் படையினரை பலவீனப் படுத்தி விட்டு ஓடுகின்ற சிலரை நோக்கி இவ்வாறு சத்தமிட்டார்.
"என்னருமைத் தோழர்களே!.இன்று நீங்கள் மோசமானதொரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.யா! அல்லாஹ்... இந்த முஸ்லிம்களின் செயலை விட்டும் நான் ஒதுங்கிக் கொண்டேன்."
அதன் பின்னர் அவர் தன்னை சூழ இருந்த தோழர்களைப் ஓரணியில் ஒன்று திரட்டுகிறார். ஏனெனில், வேவ் வேறாக பிரிந்திருந்து யுத்தம் செய்வது முஸ்லிம் படையினருக்கு பாதகமாகவும் முஸைலமாவின் படையினருக்கு சாதகமாவும் இருந்தது.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று படுத்தியதன் பின்னர் அவர்களை நோக்கிய தாபித் இப்னு கைஸ் (ரலி) "இங்கே பாருங்கள் தோழர்களே...இப்படித்தான் எதிரிகளைத் தாக்கவேண்டும் " என்று கூறியவராக முசைலமாவின் படையினருடன் உத்வேகமாக போரிடத் துவங்கினார். என்றாலும், அவரால் நீண்ட நேரம் யுத்தம் செய்ய முடியவில்லை. அவரை சுற்றி வளைத்த முசைலமாவின் படையினர் மிக இலகுவாக அவரைக் கொலை செய்து விட்டனர்.
யார் இந்த தாபித் இப்னு கைஸ் (ரலி)?
இக்ரிமா முதலாவது முஸ்லிம் படையினரை முசைலமாவின் படையினரிடம் பலிக் கொடுத்து ஓடியதன் பின்னர் முதலாம் கலீபா மதீனாவில் இருந்த அன்சாரிகளில் சிலரை தாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் காலித் இப்னு வலீதுடன் இணைந்து முசைலமாவை எதிர்க்க அனுப்பி வைக்கிறார்கள்.
அந்த யுத்தத்தில் அல்லது கொலைக் களத்தில் பலியாவதற்கு முன்னர் தாபித் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிட்ட அவரது தோழர்களின் மோசமான பழக்கம் என்ன? அவர் அந்த தோழர்களின் செயலை விட்டும் ஒதுங்கிக் கொண்டதாக சொன்ன செயல் எது? அப்போதைய முஸ்லிம் தளபதியின் மோசமான பழக்கத்தை விட்டும் அவரது செயலை விட்டும்தான் அவர் ஒதுங்கிக் கொண்டதாக அல்லாஹ்விடம் முறையிட்டிருக்க வேண்டும். ஏனெனில், இவரும் அன்சாரிகளை தலைமைத் தாங்கி அழைத்து சென்ற ஒரு தலைவராக இருக்கிறார்.
தாபித் இப்னு கைஸ் (ரலி) யுடைய சஹாதத்திற்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையை முன்னின்று நடாத்தியவர் ஸைத் இப்னு கத்தாப் (ரலி) யாகும்.
இக்ரிமாவின் தலைமையில் அழைத்து செல்லப் பட்ட முதலாவது முஸ்லிம் படையினர் காட்டிக் கொடுக்கப் பட்டு பலிக் கொடுத்ததன் பின்னர் முதலாம் கலீபா மதீனாவில் இருந்த முஹாஜிரீன்களின் சிலரை ஸைத் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் தலைமையில் காலித் இப்னு வலீதின் படையினருடன் அனுப்பி வைக்கிறார்.
ஸைத் இப்னு கத்தாப் (ரலி) குற்றுயிராக மீதம் இருந்த முஸ்லிம் படையினரை நோக்கி "இந்தக் கூடாரங்கள் காலியான பின்னர் நீங்கள் எங்குதான் போக முடியும்?" என்று சொல்லி விட்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எதிரியை துரத்தியடித்து வெற்றிவாகை சூடும் வரையிலும் அல்லது அல்லாஹ்விடம் என்னை ஒப்படைக்கும் வரையிலும் இதற்கு மேல் நான் ஒரு வார்த்தையும் பேச மாட்டேன். அதன் காரணமாக நான் அவனிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்"
அல்லாஹ்விடம் மன்னிப்பை வேண்டி நிற்க அந்த கொலைக் களத்தில் அவர் என்ன தவறுதான் செய்தார்?
முஹாஜிர்களை அந்தக் கொலைக் களத்தை நோக்கி தவறாக கொண்டு வர இஸ்லாத்தின் எதிரிகள் தன்னை உபயோகித்துக் கொண்டதை அவர் உணர்ந்துக் கொண்டார். சொன்ன விதமாகவே அந்த மகானும் முசைலமாவின் படையினரால் சஹீதாக்கப் படுகிறார்.
சிதைந்துப் போன முஸ்லிம் படையினரின் தலைமைப் பொறுப்பை இப்பொழுது அபூ ஹுதைபா (ரலி) ஏற்கிறார். அவரும் சஹீதாக்கப் படுகிறார். அவருக்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையை பராஆ இப்னு மாலிக் (ரலி) ஏற்கிறார்.
இவர் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உதவியாளர் அனஸ் (ரலி) அவர்களின் சகோதரராவார். இவரிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. யுத்தத்துக்கு தயாராகி விட்டால் இவரது உடம்பு ஆரூடம் சொல்பவர்கள் சாமி வந்தால் ஆடுவார்களே அது போல குலுங்கத் துவங்கிவிடும். பிறர் இவரைப் பிடித்து நிறுத்தும் அளவுக்கு அந்த உத்வேகத்தால் இவர் குலுங்கத் துவங்குவார்.
ஆக்ரோசமாக குலுங்கும் உடலுடன் அவர் தனது வீரர்களைப் பார்த்து "என்னருமை முஸ்லிம்களே! நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்!இங்கே பாருங்கள்!உங்கள் சகோதரன் பராஆ இப்னு மாலிக் நின்றுக் கொண்டிருக்கிறேன்.என்னுடன் விரைந்து வாருங்கள்!" என்று முஸ்லிம் வீரர்களை கூவி அழைத்தார்.
தளர்ந்திருந்த முஸ்லிம்கள் அவரை சூழ ஒன்று திரண்டார்கள்.
இப்பொழுது முஸ்லிம் படையணி பராஆ இப்னு மாலிக்கின் (ரலி) தலைமையில் முசைலமாவின் படையினரை எதிர்க்க துவங்கியது.
என்ன ஆச்சரியம்?
போரின் திசை மாறியது.
முஸ்லிம் வீரர்கள் உற்சாகமானார்கள்.பயங்கரமாக போரிட்டார்கள்.
பராஆ இப்னு மாலிக் (ரலி) தலைமையில் புது வேகத்துடன் ஆக்ரோசமாக எழுந்து நின்ற முஸ்லிம் படையை எதிர் கொள்ள முடியாமல் முசைலமாவின் படையினர் ஓடத் துவங்கினார்கள். முஸ்லிம்கள் அவர்களை ஓட ஓட விரட்டினார்கள்.
முசைலமாவின் படையினர் ஆயிரக் கணக்கில் வெட்டி சாய்க்கப் பட்டார்கள்.
முஸ்லிம் படையின் அதன் தளபதிகளின் நயவஞ்சகத்தனமான செய்கையின் காரணமாக ஆரம்பத்தில் சுமார் ஆயிரத்து முன்னூறு முஸ்லிம் வீரர்கள் சஹீதானார்கள். அவர்களில் சுமார் எழுநூறு ஹாபிஸ்களும் அடங்குவார்கள். ஆனால், பராஆ இப்னு மாலிக்கின் (ரலி) தலைமையில் சீறிஎழுந்த முஸ்லிம் படையினரின் கைகளினால் முசைலமாவின் படையினரில் சுமார் இருபத்து இரண்டாயிரம் பேர்கள் வரை கொல்லப் பட்டார்கள்.
பயங்கரமான இத்தகைய எதிர் தாக்குதலை முசைலமாவோ அல்லது அவனது படையினரோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
உயிருக்குப் பயந்த முஸைலமா ஓடத் துவங்கினான். அவனுடன் அவனது படையினரும் ஓடத் துவங்கினார்கள். வேக வேகமாக பயந்தோடிய அவர்கள் ஹதீக்கா என்ற இடம் வரும் வரை தமது ஓட்டத்தை நிறுத்தவில்லை.
ஹதீக்கா என்ற அந்த இடத்தில் நிறைய கோட்டைகள் இருந்தன. முசைலமா தனது படையினருடன் அங்கிருந்த ஒரு கோட்டையினுள் ஓடி ஒளிந்து அந்தக் கோட்டைக் கதவை மூடிக் கொண்டான்.
அவர்களை ஓட ஓட விரட்டி வந்த முஸ்லிம் படையினர் மூடிய கோட்டை வாசலைக் கண்டு திகைத்து நின்றார்கள். ஆக்ரோசமாக குலுங்கிக் கொண்டிருந்த பராஆ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அந்த கோட்டைக் கதவைக் கண்டு திகைக்கவில்லை.
அவர் கொஞ்சமும் குறையாத அதே ஆக்ரோசத்துடன் தனது வீரர்களைப் பார்த்து "தாழிடப் பட்ட இந்தக் கோட்டையினுள் என்னை தூக்கி எறியுங்கள்."என்று கட்டளையிட்டார். அவர்களுக்கு தலைமைத் தாங்கிய தளபதியை இவ்வாறான அக்னிப் பரீட்சையில் ஈடுபடுத்த அவர்கள் தயங்கினார்கள்.
அவர் ஆக்ரோஷமாக மீன்டும் கட்டளையிட்டார்.
அதன்படி பராஆ இப்னு மாலிக் (ரலி) யை முஸ்லிம் வீரர்கள் ஒன்றாக தூக்கி கோட்டையினுள் வீசி எறிந்தார்கள்.கோட்டையினுள் வீசி எறியப் பட்ட பராஆ இப்னு மாலிக் (ரலி) யின் குலுங்குகின்ற ஆக்ரோஷமான தோற்றத்தைக் கண்டு கிளி பிடித்த முசைலமாவின் படையினர் ஓடி ஒளியத் துவங்கினார்கள்.
பராஆ இப்னு மாலிக் (ரலி) கோட்டைக் கதவைத் திறந்து விட்டார்.
முஸ்லிம் படையினர் உத்வேகத்துடன் கோட்டையினுள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்த முஸ்லிம்கள் எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
இந்த சமரிலே பராஆ இப்னு மாலிக் (ரலி) கொல்லப் படுகிறார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜிஊன்)
பயங்கரமான யுத்தம் கோட்டைக்கு வெளியே நடை பெற்ற பொழுது கொல்லப் படாத பராஆ இப்னு மாலிக் (ரலி) எதிரிகள் தோற்று ஓடும் பொழுது கொல்லப் பட்டது ஆச்சரியமான செய்தியாகும். (பயாஸ் ப்ரதர்........இதைப் பற்றியெல்லாம் மிச்சம் யோசிக்கக் கூடாது....இவை எல்லாம் ஸஹாபாக்கள் சம்பந்தப் பட்ட சமாச்சாரம்...) என்றாலும், அப்பொழுது முசைலமாவின் வீரர்கள் சரணாகதி அடையும் நிலையில் தளர்ந்துப் போய் இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
பராஆ இப்னு மாலிக் (ரலி) யுடைய மரணத்தின் பின்னர் அல்லது கொலைக்குப் பின்னர் காணாமல் போயிருந்த முஸ்லிம்களின் தளபதி காலித் இப்னு வலீத் காட்சிக்கு வருகிறார்.
அடடடடா??????
இப்பொழுது முஸ்லிம்களின் தளபதியாக அவர் கட்டளைகள் பிறப்பிக்கத் தொடங்குகிறார்.அவர் ஒன்றாக ஓரணியில்உறுதியாக ஒன்று திரண்டிருந்த முஸ்லிம் வீரர்களை அவர்களுடைய கோத்திரங்களை இனம் பிரித்து அறியும் வகையில் வேவ் வேறாக பிரிக்கிறார். பின்னர், அந்தந்த கோத்திரங்களின் கொடியின் கீழே அவர்களை அணிவகுத்து யுத்தம் புரிய கட்டளையிடுகிறார்.
இது ஏன் என்ற கேள்விக்கு, பல்வீனமானவர்களையும் பலமானவர்களையும் இனம் பிரித்து அறிய இவ்வாறு அவர் செய்ததாக கதையளந்து இருக்கிறார்கள்.நான் நம்பவில்லை. நம்புபவர்களின் தெரிவில் ஆட்சேபனை இல்லை..
எது எப்படி இருந்தாலும் ,தோற்று ஓடிக் கொண்டிருக்கும் முசைலமாவின் படையினரை சுற்றி வளைத்து தோற்கடித்து முசைலமாவையும் மிக இலகுவாக கைது செய்திருக்க முடியும். முசைலமாவின் கைது விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடையாக இருந்திருக்கும்.
போரின் சூழலும் அதற்கு ஏதுவாகவே இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
இக்கட்டத்தில் ,காலித் இப்னு வலீதுடன் ஒன்றாக இருந்த வஸிஹ் தோற்றுப் போகும் முசைலமாவின் போரின் நாயகனாக மாறுகிறார்.
யார் இந்த வஸிஹ்?
வஸிஹ் உஹத் யுத்தகளத்தில் நபி அவர்களின் சிறிய தந்தையை தூர இருந்து ஈட்டியினால் குறி தவறாமல் வீசிக் கொண்டவர். நமது காலத்து யுத்த பாசையில் சொல்வதென்றால் எதிரி படை வீரர்களை கிலி கொள்ள வைக்கின்ற தூர இருந்து போட்டுத் தள்ளும் 'ஸ்னைப்பர்.' (யோவ் பயாஸ்......... அந்தக்காலத்தில் ஸ்னைப்பர் என்று யார்தான் இருந்தார்கள்?- என்று அஸ் ஸுன்னா அறிவாளிகள் கேள்வி கேட்கக் கூடும்.)
இந்த யுத்தத்திலும் அவருக்கு வழங்கப் பட்ட கடமையை எதுவித குறைவும் வைக்காமலே அந்த ஸ்னைப்பர் செவ்வனே செய்து முடிக்கிறார்.யமாமாவில் இருந்த ஸ்னைப்பர் வஸிஹ் தூர இருந்து குறி தவறாமல் ஈட்டியை எறிந்து முசைலமாவைக் கொன்று விடுகிறார்.
முசைலமாவின் மரணம் அவனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறது.
அதே போல, முடிவில்லாத பல கேள்விகளின் ஆரம்பமாகவும் இருக்கிறது.

Comments
Post a Comment